வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.;
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் தக்காளி விளைச்சல் உச்சத்தை அடைந்திருப்பதால் அதன் விலை பெரும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. சந்தைகளில் கடந்த சில வாரங்களுக்கு முன் கிலோ ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி, இப்போது மொத்த விலை சந்தைகளில் கிலோ ரூ.5-க்கும், சில்லறை விலைக்கடைகளில் ரூ.10-க்கும் மட்டுமே விற்கப்படுகிறது.
வெளிச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக தக்காளியின் கொள்முதல் விலை கிலோ ஒரு ரூபாய் என்ற அளவுக்கு சரிந்து விட்டது. அதனால், பல இடங்களில் தக்காளியை பறிக்காமல் தோட்டத்திலேயே அழுகுவதற்கு விவசாயிகள் விட்டுவிடுகின்றனர்.
பறிக்கப்பட்ட தக்காளிகளை சந்தைகளுக்கு கொண்டு செல்ல அதிக செலவாகும் என்பதால் சாலைகளிலும், குப்பைகளிலும் கொட்டுகின்றனர். குழந்தைகளைப் போல பார்த்துப் பார்த்து வளர்த்த காய்கறிகளை இப்படி கொட்டுவதைப் போன்ற கொடுமை கிடையாது.
தக்காளிக்கு ஏற்பட்ட நிலை தான் கத்தரிக்காய்க்கும். சந்தைகளில் கத்தரிக்காயின் விலையும் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை என்ற நிலையிலிருந்து கிலோ ரூ.10 என்ற அளவுக்கு சரிந்து விட்டது. அதனால், கத்தரிக்காயின் கொள்முதல் விலையும் ஒற்றை இலக்கத்திற்கு சரிந்து விட்டது.
இது ஏதோ இந்த ஆண்டு மட்டும் புதிதாக ஏற்பட்டுள்ள சூழல் அல்ல. ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் கண்ணீர் விடுவது தொடருகிறது. ஆனால், விவசாயிகளின் இந்த சிக்கலுக்கு தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் முயற்சி செய்யவில்லை. இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு காய்கறிக்கு விலை உத்தரவாதம் வழங்குவது தான்.
அனைத்து காய்கறிக்கும் கொள்முதல் விலை நிர்ணயிப்பதன் மூலம் தான் காய்கறியை பயிரிடும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்க வேண்டும். அத்துடன் அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதற்கு வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.
மேலும் வேளாண் விளைபொருட்கள் அதிகமாக விளையும் காலங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளை அமைக்கவும், தக்காளி சாறு தயாரிப்பதற்கான நடமாடும் ஆலைகளையும் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.