நெற்பயிரில் இலை சிலந்திகள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
நெற்பயிரில் இலை சிலந்திகள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.
நீடாமங்கலம்:-
நெற்பயிரில் இலை சிலந்திகள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இலை சிலந்தி தாக்குதல்
தற்போது நெல் வயலில் இலை சிலந்தி தாக்குதல் ஆங்காங்கே பரவலாக தென்படுகிறது. தாக்கப்பட்ட இலையின் மேற்பரப்பில் வெள்ளை அல்லது மஞ்சள் நிற புள்ளிகள் தென்படும். இந்த புள்ளிகள் நாளடைவில் ஒன்றோடொன்று இணைந்து இலைகள் முழுவதும் பரவி இலைகள் காய்ந்து விடும்.
இலையின் அடிப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இலை சிலந்திகள் இருப்பதை நுண்ணோக்கி மூலம் காணலாம். இது பூச்சிகள் அல்லாத சாறு உறிஞ்சும் சிலந்திகள் இனத்தை சார்ந்தவை. விட்டுவிட்டு பெய்யும் மழை தூறல்கள் மற்றும் இரவு நேர காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் சிலந்திகளின் தாக்குதல் அதிகமாக தென்படும்.
கட்டுப்படுத்த...
இதனை கட்டுப்படுத்த அசாடிராக்டின் 0.003 சதவீதம் வயலில் தெளிக்கவேண்டும். டைக்கோபோல் ஒரு ஏக்கருக்கு 500 மில்லி என்ற அளவில் மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இதன் மூலம் இலை சிலந்திகளை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.