விவசாயிகள் சாலையில் தேங்காயை உடைத்து ேபாராட்டம்

தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தாராபுரத்தில் விவசாயிகள் சாலையில் தேங்காயை உடைத்து ேபாராட்டம் நடத்தினார்கள்.

Update: 2023-08-08 15:08 GMT

தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தாராபுரத்தில் விவசாயிகள் சாலையில் தேங்காயை உடைத்து ேபாராட்டம் நடத்தினார்கள்.

தேங்காய் உடைத்து போராட்டம்

தாராபுரம் அருகே அக்கரை பாளையம் கிராமத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் தென்னை விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு தாராபுரம் வட்டார தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஏர்முனை இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் தனபால் முன்னிலை வைத்தார்.

அப்போது ஏர்முனை இளைஞர் அணி சார்பில் தென்னை விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு செல்லும் வகையில் தேங்காய்க்கு உரிய விலை கேட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அதில் ரேஷன் கடைகளில் இறக்குமதி செய்து விற்கப்படும் பாமாயிலுக்கு மாற்றாக ஆகச்சிறந்த சத்துக்கள் நிறைந்த தேங்காய் எண்ணெயை மானிய விலையில் பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டும்.

கொப்பரைக்கு ரூ.150 விலை

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத 'கள்'ளுக்கான தடை கடந்த 35 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து வருகிறது. 'கள்'ளுக்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும். எந்தவித நிபந்தனையும் இன்றி கொப்பரை தேங்காய் விலையை ரூ.150 ஆக நிர்ணயிக்க வேண்டும். தேங்காய் எண்ணெயை சத்துணவு திட்டத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

அரசு தென்னை விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் தமிழகமெங்கும் உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி வரும் செப்டம்பர் மாதத்தில் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

கலந்து கொண்டவர்கள்

அப்போது தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கம் மாநில அவைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மாநிலத்துணைத்தலைவர் சண்முகசுந்தரம், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், காங்கயம் வட்டாரத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, குண்டடம் வட்டாரத்தலைவர் சுரேஷ், ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி. தாராபுரம் வட்டார நிர்வாகிகள் ஆர்.ஜீவானந்தம், எஸ்.இளங்கோ உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்