வயல்களில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பனந்தாள் அருகே பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி வயல்களில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-16 19:36 GMT

திருப்பனந்தாள் அருகே பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி வயல்களில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிர்க்காப்பீட்டு தொகை

தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர்க்காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருப்பனந்தாள் அருகே உள்ள மணிக்குடியில் சம்பா சாகுபடி தொடங்கிய வயல்களில் விவசாயிகள் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு காவிரி பாசன குத்தகை விவசாயிகள் சங்க செயலாளர் அமிர்த கண்ணன் தலைமை தாங்கினார்.

கருப்புக்கொடி

அப்போது தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறைவான அளவு அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், பாதிப்பு இல்லாத பிற மாவட்டங்களில் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பயிர்க்காப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறினர்.

மேலும் முற்றிலும் விவசாயத்தை மையமாக கொண்ட தஞ்சை மாவட்டத்திற்கு ரூ.36 லட்சம் காப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மாற்றி ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் பயிர்ப்காப்பீட்டு தொகை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளிக்கு முன்பாக பயிர்ப்காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தீபாவளி அன்று விவசாயிகளின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்படும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

மணிகுடில் கிராமத்தில் நாற்று நட்ட வயல்களில் இறங்கி விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்