நெல் மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் பயிராக மக்காச்சோளம் உள்ளது.தமிழ்நாட்டில் சுமார் 9 லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. உணவு உற்பத்தி மட்டுமல்லாமல் கால்நடைத் தீவனம், எண்ணெய், ஸ்டார்ச் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ளது.எனவே மக்காச்சோளத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், பெரும்பாலான விவசாயிகளின் தேர்வாக, அதிக மகசூல் தரக்கூடிய வீரிய ஒட்டு ரக மக்காச்சோளங்களே உள்ளன. இந்த ரக விதைகளின் தேவைக்கு விவசாயிகள் பெரும்பாலும் தனியார் விதை உற்பத்தி நிறுவனங்களையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் இவற்றுக்கு ஈடாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலம் வீரிய ஒட்டுரக மக்காச்சோளமான கோ 6 மற்றும் கோஎச் (எம்) 8 ரகங்கள் வெளியிடப்பட்டன. இந்த ரகங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் திருப்பூர் மாவட்டம் முழுவதும் கோ 6 வீரிய ஒட்டுரக மக்காச்சோள விதைப்பண்ணைத் திடல்கள் அமைக்கப்பட்டு தரமான விதைகள் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த விதைப்பண்ணையில் திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன் மற்றும் விதைச் சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது குடிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தா, விதைச்சான்று அலுவலர் ஹேமலதா, உதவி விதை அலுவலர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.