வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்

திருத்துறைப்பூண்டி அருகே வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-25 18:45 GMT

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பா சாகுபடி

டெல்டா மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது திருவாரூர். இந்த பகுதியில் தொழிற்சாலைகளோ, வேறு பணிகளோ நடைபெறவில்லை. முழுக்க முழுக்க விவசாயம் மட்டுமே நடைபெறும். இந்த பகுதியில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பியே சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு முன்னதாகவே மே மாதம் 24-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணியில் ஈடுபட்டனர்.

வடிகால் வாய்க்கால்

இந்த நிலையில் பருவமழை பெய்து வருவதால் வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வரி இருந்தால் மட்டுமே தண்ணீர் வடிந்து நெற்பயிர்களை காக்க முடியும்.

திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி கிராமத்தில் கெளித்தி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு வடிகால் வாய்க்காலாக திகழ்கிறது. இந்த வாய்க்காலில் ஆகாய தாமரைகள் செடிகள் புதர்போல் மண்டி காணப்படுகிறது.

ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

குளத்தில் உள்ள தண்ணீரே தெரியாத வகையில் ஆகாயதாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. தற்போது மழை காலம் என்பதால் வயல்களில் தேங்கும் தண்ணீர் வடியாமல் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வடிகால் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி கரைகளை பலப்படுத்தி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகற்ற வேண்டும்

இதுகுறித்து விட்டுகட்டியை சேர்ந்த குமரேசன் என்பவர் கூறுகையில், இந்த பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். விவசாயிகள் நகைகளை அடகு வைத்து உரங்கள் வாங்கி சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பருவமழை காலம் என்பதால் விவசாய நிலங்களில் உள்ள தண்ணீரை வடிய வைக்க வடிகால் வாய்க்கால்களை முறைபடுத்த வேண்டும்.

விட்டுக்கட்டி கெளித்தி வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து தண்ணீர் வெளியேற செல்லமுடியாத நிலையில் உள்ளது. எனவே ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்றார்.

தண்ணீர் வடியாமல் உள்ளது

அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் கூறுகையில், விட்டுக்கட்டி, வரம்பியம், வேலூர்பாலம் மற்றும் திருத்துறைப்பூண்டி நகரில் உள்ள விளைநிலங்களின் முக்கிய வடிகாலாக திகழ்வது கெளித்தி வாய்க்கால். இந்த வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் மண்டி கிடப்பதால் தண்ணீர் வடிய முடியாமல் உள்ளது.

இதனால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்றி தூர்வார வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்