மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும்-தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை

மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-05-18 18:45 GMT

மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பணியிடம் ரத்து

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆட்சியில் கல்வித்துறையில் காலம் காலமாக இருந்து வந்த பள்ளிக்கல்வி இயக்குனர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியை ஆணையராக நியமித்து பணியிடம் உருவாக்கப்பட்டது. ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டதற்கு அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வி இயக்குனர் பணியிடம் இருந்த போது அதில் பணிபுரிபவர் கல்வித்துறையில் பல்வேறு நிலைகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்து இருப்பார். இதனால் ஆசிரியர்களின் பணி சம்பந்தமான அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார். அதேபோல் மாணவர்களின் உளவியல் சம்பந்தமான அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பார். கல்வித்துறையில் பல்வேறு அனுபவங்களை பெற்ற பள்ளிக்கல்வி இயக்குனர் அத்துறையை மிகவும் சிறப்பான முறையில் வழிநடத்திய வரலாறு உண்டு. பள்ளிக்கல்வி இயக்குனர் மாணவர்களின் மனநிலையை அறிந்து வைத்திருப்பதால் மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடத்த வேண்டும், எப்பொழுது விடுமுறை விட வேண்டும், எப்போது சிறப்பு வகுப்புக்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தகுந்த நேரத்தில் அறிவுரை வழங்கி அதன்படி செயல்படுத்தி வந்தனர். இயக்குனர் பணியிடம் இருந்தவரை பள்ளிக் கல்வித்துறை சிறப்பாக இருந்தது. ஆனால், கல்வித்துறையில் இயக்குனர் பணியிடம் ரத்து செய்யப்பட்டு ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டதிலிருந்து கல்வித்துறையில் பல குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தலில், ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பதில், தேர்வு நடத்துவதில், தேர்வுத்தாள்களை மதிப்பீடு செய்வதில், வினாத்தாள் தயாரிப்பதில், மாணவர்களின் பாடத்திட்டத்தில் பல்வேறு குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

மீண்டும் ஏற்படுத்த வேண்டும்

மேலும் எமிஸ் என்ற திட்டத்தை புகுத்தி அதில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் அனைத்து விவரங்களையும் இணைய தளத்தில் பதிவேற்ற, ஆசிரியர்களை பயன்படுத்தி வருவதால் பாடம் நடத்த முடியாமல் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டில் தொய்வு ஏற்படுகிறது. ஐ.ஏ.எஸ். பணியிலுள்ள அதிகாரிகளுக்கு ஆசிரியர்களின் கள நிலவரம் தெரிய வாய்ப்பில்லை, ஆனால், பள்ளிக்கல்வி இயக்குனர் ஆசிரியராக பணியாற்றி, அதன் பிறகு பல்வேறு நிலைகளில் பதவி உயர்வு பெற்று இயக்குனராக வருவதால் அவருக்கு ஆசிரியர் மாணவர் கள நிலவரம் நன்றாக தெரியும்.

எனவே பள்ளிக்கல்வித்துறையிலுள்ள ஆணையர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு இயக்குனர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்