தேர்தல் அறிக்கையில் ரூ.1,500 என்று கூறிவிட்டுமுதியோர் ஓய்வூதிய தொகையை ரூ.1,200 வழங்குவது சரியா?- ஆர்.பி.உதயகுமார் கேள்வி

தேர்தல் அறிக்கையில் ரூ.1,500 என்று கூறிவிட்டு முதியோர் ஓய்வூதிய தொகையை ரூ.1,200 வழங்குவது சரியா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2023-07-23 21:13 GMT


தேர்தல் அறிக்கையில் ரூ.1,500 என்று கூறிவிட்டு முதியோர் ஓய்வூதிய தொகையை ரூ.1,200 வழங்குவது சரியா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

தேர்தல் அறிக்கை

மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. பெண்களுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தை கூட கிடப்பில் போட்டு விட்டார்கள். ஆனால் அந்த திட்டம் குறித்து தொடர்ந்து அ.தி.மு.க. கேள்வி கேட்டதால், வேண்டா வெறுப்பாக அந்த திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். அனைத்து மகளிருக்கும் ரூ.1000 என்று தேர்தல் அறிக்கையில் கூறினார்கள். ஆனால் இப்போது பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருக்கிறார்கள். தி.மு.க.வினருக்கு மட்டுமே ரூ.1000 வழங்க வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறார்கள். தி.மு.க. கட்சியினருக்கு மட்டும் தான் வழங்குவோம் என்று அறிவித்துவிட்டு போக வேண்டியது தானே? சோறு என்று பேப்பர் எழுதினால் சாப்பிட முடியுமா? சமைத்தால் தான் சாப்பிட முடியும். அதுபோல் இன்றைக்கு இந்த அரசு விளம்பர வெளிச்சத்தில் உள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 35 லட்சம் பேருக்கு முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்பட சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கினோம். ஆனால் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ரூ.1,500 வழங்குவதாக அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் சுமார் 5 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய தொகையை நிறுத்தி விட்டது. தற்போது ரூ.1000 நிதியை ரூ.1,200 வழங்குவதாக அறிவித்துள்ளது. பல லட்சம் பேருக்கு ஓய்வூதியத்தை நிறுத்தி விட்டு, கூடுதலாக ரூ.200 சேர்த்து வழங்குவது ஏற்புடையதா?

கப்பலூர் சுங்கச்சாவடி

மதுரையில் தென்பகுதி நுழைவாயிலாக திருமங்கலம் உள்ளது. எனவே திருமங்கலம் தொகுதிக்கு, பல்வேறு நலத்திட்டங்களை எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தினார். கள்ளிக்குடியில் புதிய வட்டம், திருமங்கலத்தில் புதிய கோட்டம், திருமங்கலம் தொகுதியில் உள்ள 324 கிராமங்கள், 116 ஊராட்சிகள், திருமங்கலம் நகரில் உள்ள 27 வார்டுகள், இரண்டு பேரூராட்சியில் உள்ள 30 வார்டுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சாலைகள், புதிய கிராம இணைப்பு சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் செய்யப்பட்டன. திருமங்கலத்தில் புதிய பஸ் நிலையத்தை உருவாக்கிட, நான்கு வழிச்சாலையில் இரண்டடுக்கு பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்த பணி கோரப்பட்டது. அதனை தொடர்ந்து தி.மு.க. ஆட்சி வந்த உடன் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. அதேபோல் திருமங்கலத்தில் ரெயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை செய்யப்பட்டது. அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை சட்டமன்றத்தில் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவோம் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை அகற்றவில்லை. இனியும் காலதாமதம் செய்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். எதிர்க்கட்சி தொகுதிகளை பாரபட்சம் காட்டி வஞ்சிக்க கூடாது. இது ஜனநாயகத்திற்கு அழகல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்