பல ஆண்டுகளுக்கு பின்பு களரி கண்மாய்க்கு தண்ணீர் வந்தது

ராமநாதபுரம் மாவட்ட கணக்கில் இருந்து திறந்து விடப்பட்ட வைகை தண்ணீரை முறையாக கொண்டு சேர்த்ததால் பல ஆண்டுகளுக்கு பின்னர் களரி கண்மாய்க்கு தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-01-08 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்ட கணக்கில் இருந்து திறந்து விடப்பட்ட வைகை தண்ணீரை முறையாக கொண்டு சேர்த்ததால் பல ஆண்டுகளுக்கு பின்னர் களரி கண்மாய்க்கு தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

களரி கண்மாய்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போதிய அளவு மழை பெய்யாததால் விவசாயிகளும், மக்களும் ஏமாற்றம் அடைந்தனர். வைகை அணையில் இருந்து முதல்முறையாக ராமநாதபுரம் மாவட்ட கணக்கில் இருந்தும் உபரிநீரும் சேர்த்து திறந்து விடப்பட்டதால் வைகை தண்ணீர் வரும் கால்வாய் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பியது. ஓரளவுக்கு மேல் தண்ணீர் நிரப்பியபின் சேமிக்க முடியாமல் போனதால் ஆற்றில் வந்த வைகை தண்ணீர் அதிகளவில் கடலில் கலந்து மண்ணுக்கும், மக்களுக்கும் பயனின்றி வீணாகியது.

மாவட்டத்தின் 3-வது பெரிய கண்மாய் என்று கருதப்படும் களரி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், கால்வாய் வழியில் உள்ள கண்மாய்கள் நிரப்பிய பின்னர் களரி கண்மாய்க்கு தண்ணீர் சென்று சேரவில்லை. சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் இந்த கண்மாய் ஏறத்தாழ ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவை கொண்டது.

20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த கண்மாயை நம்பி விவசாயம் செய்து வந்த நிலையில் பல ஆண்டுகளாக தண்ணீரின்றி விவசாயம் இல்லாமல் போனது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்நிலையில் தற்போது வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் கணக்கில் உள்ள தண்ணீரை மீண்டும் திறந்துவிட அரசு உத்தரவிட்டது. இந்த நீரை முறையாக களரி கண்மாயில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டார். இதன்படி பொதுப்பணித்துறையினர் வருவாய்த்துறையினர் உள்ளிட்டோரிடம் ஆலோசனை செய்து களரி கண்மாய்க்கு செல்லும் வழிகளில் ஏற்கனவே நிறைந்த கண்மாய்களுக்கு மீண்டும் தண்ணீர் செல்லாதபடி அடைத்து களரி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.

கடந்த 5 நாட்களாக தண்ணீர் சென்ற நிலையில் கண்மாயில் 35 சதவீதம் தண்ணீர் சேர்ந்துள்ளது. தண்ணீர் வந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதனை வயல்வெளிகளுக்கு மடைகள் வழியாக திறந்துவிட்டு விவசாயத்திற்கு பாய்ச்சி வருகின்றனர்.

இதுகுறித்து களரி கண்மாய் பாசன விவசாயியான சுமைதாங்கி ராமையா கூறியதாவது:- எங்கள் பகுதி மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை இரவில் நெற்பயிர்களுக்கும், பகலில் மிளகாய் பயிர்களுக்கும் திறந்துவிடப்பட்டு வருகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்