64 நாட்களுக்கு பிறகு கனியாமூர் பள்ளியில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியது
கலவரத்தால் சேதமடைந்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 64 நாட்களுக்கு பிறகு மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியது.
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு கடந்த 17.7.2022 அன்று நடந்த போராட்டம், கலவரமாக வெடித்தது. அப்போது பள்ளி மற்றும் வாகனங்கள் சூறையாடப்பட்டதோடு, தீ வைத்தும் கொளுத்தப்பட்டன. இதில் பள்ளி கட்டிடம் பலத்த சேதமடைந்தது.
மேலும் போலீஸ் வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து பள்ளி மூடப்பட்டு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
நேரடி வகுப்பு
மேலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தற்காலிகமாக எ.வாசுதேவனூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இதையடுத்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை மறுசீரமைக்க அனுமதி வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அளித்துள்ள கோரிக்கையை பரிசீலனை செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
64 நாட்களுக்கு பிறகு...
அதன் அடிப்படையில் காவல் துறையினர், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகிகளின் கருத்துகளை மாவட்ட நிர்வாகம் கேட்டறிந்தது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படும் அலுவலர் மற்றும் காவல்துறையினரின் கண்காணிப்பில் 45 நாட்களுக்குள் பள்ளி கட்டிடங்களின் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து 64 நாட்களுக்கு பிறகு நேற்று பள்ளி நிர்வாகத்தினர் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூலம் பள்ளி கட்டிடங்களை மறு சீரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது முதல் கட்டமாக பள்ளியின் ஏ பிளாக் கட்டிடம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.