6 நாட்களுக்கு பின் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டன.;
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதி பெய்த அதிகனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து நிவாரண பணிகள், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. தற்போது மழை வெள்ளம் வடிந்து வருவதால் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். மேலும் தூத்துக்குடி அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வெள்ள பாதிப்பில் இருந்து திருச்செந்தூர் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ்கள், வேன்கள், இருசக்கர வாகனங்களில் கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
6 நாட்கள் கழித்து பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்ட நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டன.