3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை - 16 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது
சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது. 16 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது.;
இலங்கையில் தமிழா்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதி ஜாப்னா என்ற யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமான சேவை நடந்தது.
1983-ம் ஆண்டில் இருந்து இலங்கையில் உள்நாட்டு போா் தொடங்கி தீவிரம் அடைந்ததால் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான விமான சேவை நிறுத்தப்பட்டது. அங்கு போா் ஓய்ந்து அமைதி திரும்பியதும் யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆனால் உள்நாட்டு போரினால் பலாலி விமான நிலையம் முழுமையாக பாதிக்கப்பட்டது. மீண்டும் விமானசேவை தொடங்குவதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டது. கடந்த 36 ஆண்டுகளாக யாழ்ப்பாணம்-சென்னை இடையே விமானசேவை தடைப்பட்டிருந்தது.
2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி யாழ்ப்பாணம் பன்னாட்டு விமான நிலையம் சீரமைக்கப்பட்டு சென்னைக்கு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சென்னையில் இருந்து யாழ்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது. காலை 10.20 மணிக்கு அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. இதில் 16 பயணிகள் பயணம் செய்தனர். பின்னர் பகல் 2.30 மணிக்கு அந்த விமானம் மீண்டும் சென்னைக்கு 61 பயணிகளுடன் வந்து சேர்ந்தது. இந்த விமான சேவை வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்கள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.