3 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்குப்பாலத்தில் காலிப்பெட்டிகளுடன் ரெயில் சோதனை ஓட்டம்
தொழில்நுட்ப கோளாறு சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்குப்பாலத்தில் பயணிகள் இல்லாமல் காலி பெட்டிகளுடன் ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
ராமேசுவரம்,
தொழில்நுட்ப கோளாறு சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்குப்பாலத்தில் பயணிகள் இல்லாமல் காலி பெட்டிகளுடன் ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
ரெயில் நிறுத்தம்
பாம்பன் கடலுக்குள் ரெயில் பாலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூக்குப் பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக பாம்பன் ரெயில்வே பாலத்தில் ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் ரெயில் செல்லும் போது உள்ள அதிர்வுகளை கண்டறிவதற்காக நேற்று பாம்பன் ரெயில் தூக்குப்பாலம் வழியாக பயணிகள் இல்லாமல் காலிப்பெட்டிகளுடன் ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
சோதனை ஓட்டம்
அதற்காக ராமேசுவரத்தில் இருந்து பயணிகள் இல்லாமல் 8 பெட்டிகளுடன் புறப்பட்ட ரெயில் ஒன்று பாம்பன் ரெயில்வே பாலம் வழியாக தூக்குப்பாலத்தை கடந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக முன்னோக்கியும் பின்னோக்கி இயக்கியபடியும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
தூக்குப்பாலம் வழியாக ரெயில்கள் இயக்கப்படும்போது தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகளில் அதிர்வுகள் ஏதேனும் பதிவாகியுள்ளதா என்பது குறித்தும் ரெயில்வே என்ஜினீயர்கள், அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்தனர். அப்போது அதிர்வுகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை என ஆய்வு குழுவினர் தெரிவித்தனர். மேலும் இன்று 2-வது நாளாக மீண்டும் பயணிகள் இல்லாமல் காலிப் பெட்டிகளுடன் தூக்குப்பாலம் வழியாக ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சோதனை ஓட்ட முடிவில் தான் பயணிகளுடன் ரெயில் போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என தெரியவரும்.