2 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி - சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தீவிரம்
2 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் பொருட்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019-ம் ஆண்டு வரை பொருட்காட்சி வழக்கம்போல் நடந்து வந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பொருட்காட்சி நடத்தப்படவில்லை.
இந்தநிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்னர் நடப்பாண்டு பொருட்காட்சியை பிரமாண்டமாக நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மேற்கொண்டு வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறையை உள்ளடக்கிய 60 நாட்கள் பொருட்காட்சி நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் வானுக்கும், பூமிக்கும் சுழலும் வகையிலான ராட்சத ராட்டினங்கள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற உள்ளன. இதுதவிர மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பிலும் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்திய சிறப்பு திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதுபோல தமிழக அரசின் ஒவ்வொரு துறைகள் சார்பிலும், அந்தந்த துறைகளின் சாதனைகளை பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்ட அரங்குகள் இடம் பெற உள்ளன.
தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது. வருகிற 30-ந்தேதியன்று டெண்டர் திறக்கப்படுகிறது. டெண்டர் இறுதி செய்யப்பட்ட உடன் பொருட்காட்சிக்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீவுத்திடலில் நடத்தப்படும் பொருட்காட்சியின் நுழைவு வாயில் பார்வையாளர்களை கவரும் வகையில் இடம் பெறுவது வழக்கம்.
அந்தவகையில், இந்த ஆண்டு தமிழகத்தின் பண்பாடு, கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கண் முன்னே நிறுத்தும் வகையில் நுழைவு வாயில் அமைக்கப்பட உள்ளது. சுற்றுலா பொருட்காட்சியின் நுழைவு வாயிலுக்கு மு.க.ஸ்டாலின் ஒப்புதல் பெற்ற பின்னர், இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில் பொருட்காட்சியை மிகச் சிறப்பாக நடத்திடும் வகையில், அரசின் பல்வேறு துறைத்தலைவர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளாகத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்துக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு அரசுத்துறை அரங்குகள் அமைப்பதற்கான பணிகளை அடுத்த மாதம் (டிசம்பர்) 2-வது வாரத்துக்குள் முடித்து, பொருட்காட்சி தொடக்க விழா நடத்துவதற்கு ஏதுவாக இருக்கவேண்டும் என ஆலோசனையும் வழங்கப்பட்டது.