ஆகாய தாமரையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
மோகனூர் வாய்க்காலில் ஆகாய தாமரையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மோகனூர்:
நாமக்கல் மாவட்டம் நன்செய் இடையாறு பகுதியில் இருந்து மோகனூர் வாய்க்கால் தொடங்கி, நாமக்கல் மாவட்ட எல்லையான ஒருவந்தூர் அடுத்த வடுகப்பட்டி வரை சென்று நிறைவடைகிறது. இந்த வாய்க்கால் சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் சென்று சுமார் 3,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அவற்றின் மூலம், நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு, மோகனூர் வாய்க்கால் கடந்தாண்டு ரூ.55 கோடி மதிப்பில் பல்வேறு மேம்பாடு செய்யப்பட்டது. அதில் தலைப்பு வாய்க்காலான பாலப்பட்டி முதல், நன்செய் இடையாறு வரை உள்ள இடைப்பட்ட தூரம் விடுபட்டது. இது குறித்து அப்போதே பல்வேறு விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. ஆனாலும் மேம்படுத்துவதற்கு, நிதி ஒதுக்கவில்லை. மேலும், வாய்க்கால் ஆண்டு பராமரிப்பு பணியும் சரிவர மேற்கொள்ளவில்லை என விவசாய சங்க பிரதிநிதிகள் கூறினர்.
இந்தநிலையில் கொமாரபாளையம் ஊராட்சி களிமேடு பகுதியில் விஸ்வநாதன் உடைப்பு என்ற பகுதியில் வாய்க்காலில், ஆகாய தாமரை படர்ந்து வாய்க்கால் தெரியாத அளவு மூடிக் கிடக்கின்றது. அதேபோல் விஸ்வநாதன் உடைப்பு பகுதியில் சேதம் ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் தண்ணீர் கசிந்து காவிரி ஆற்றில் வீணாக கலக்கின்றன.
அதனால் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. இதனால் வாய்க்கால் பாசனத்தை நம்பி சாகுபடி செய்த பயிர்கள் காய்ந்து விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஆண்டு தோறும், ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே கடந்த, 24-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் அதற்கான முழு பலனும் மோகனூர் வாய்க்கால் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.
பாசன பயிர்கள் பயன்பெறும் வகையில் தடையின்றி தண்ணீர் கிடைக்கவும், வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆகாய தாமரை அகற்றவும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.