வனத்துறையை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்
முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக 3 வக்கீல்களை கைது செய்த வனத்துறையை கண்டித்து வக்கீல்கள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக 3 வக்கீல்களை கைது செய்த வனத்துறையை கண்டித்து வக்கீல்கள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் சாலை மறியல்
முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக பொய் வழக்குப்போட்டு வக்கீல்கள் சுப்பிரமணி, இளம்முருகு மார்த்தாண்டன், பெருமாள் பிள்ளை ஆகியோரை வனஅதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும், எனவே வக்கீல்களை கைது செய்த வனத்துறையினரை கண்டித்து நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்றனா். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் திடீரென வனத்துறைக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியபடி கோர்ட்டு வளாகத்தின் முன்பு வந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் கூறினர். பின்னர் சிறிது நேரத்தில் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் கோர்ட்டு ரோடு பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வக்கீல்கள் போராட்டத்தை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.