கல்லட்டி மலைப்பகுதியில் 2-வது கியரில் வாகனங்களை இயக்க அறிவுறுத்தல்

கல்லட்டி மலைப்பாதையில் தொடர் விபத்து ஏற்படும் நிலையில் வாகனங்களை 2-வது கியரில் இயக்க வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2022-07-11 14:27 GMT

கோவை:

கல்லட்டி மலைப்பாதை குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கல்லட்டி மலைப்பாதை மாநில நெடுஞ்சாலைக்கு உட்பட்டதாகும். இங்கு மற்ற இடங்களை போல சாலையின் அகலம் 5½ மீட்டர் முதல் 7 மீட்டர் வரை உள்ளது. ஆனாலும் விபத்துகளை தடுக்க 2-வது கியரில் மட்டும்தான் வாகனங்களை இயக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது அந்த வழியாக தினந்தோறும் வருபவர்களுக்கும், உள்ளூர் வாகன டிரைவர்களுக்கும் தெரியும். ஆனால் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு தெரியாது. இதனால் அவர்கள் கார்களை 4-வது கியரில் இயக்குகின்றனர்.

இங்கு நடந்த தொடர் விபத்துகளை தொடர்ந்து நாங்கள் சாலையில் சோதனை ஓட்டம் செய்து பார்த்தபோது, ஒரு சில இடங்களில் முதல் கியரிலேயே 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்கின்றன. அதாவது அந்த அளவுக்கு பாதைகள் செங்குத்தாக உள்ளது.

ஆனால் வாகனங்களுக்குள் அமர்ந்து நாம் செல்லும்போது அது சரியாக தெரியாது. இது தெரியாமல் 3 மற்றும் 4-வது கியரில் வாகனங்களை இயக்குவதுதான் விபத்துக்கு முக்கிய காரணமாகும்.

இந்தநிலையில் தலை குந்தா பகுதியில் உள்ள சோதனை சாவடியை தவிர்ப்பதற்காக குறுக்கு வழியாக சிலர் கல்லட்டி பாதைக்கு வருவதை தடுக்க, தலை குந்தாவில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் தள்ளி புதிதாக சோதனைச்சாவடி அமைக்க கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்