குடிநீர் வினியோகம் தொடர்பாக ஆலோசனை
புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர் வினியோகம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடிநீர் வினியோகம் தொடர்பாக நகராட்சியில் நேற்று கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத் அலி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திருச்சி, புதுக்கோட்டை கோட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகராட்சியில் குடிநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீரை சீராக வழங்குமாறும், சரியான அளவில் வழங்கவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு நகராட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.