சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு முன்னேற்பாடுகள்

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் வருகிற 24-ந் தேதி குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-05-19 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் வருகிற 24-ந் தேதி குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சட்டைநாதர் கோவில்

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள் பாலித்து வருகிறார். மேலும் இந்த கோவிலில் அஷ்ட பைரவர்கள், திருஞானசம்பந்தர் ஆகியோர்களும் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது.

விழாவை முன்னிட்டு சட்டைநாதர் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேற்று குடமுழுக்கு விழா முன்னேற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சிவன் சன்னதி, அம்பாள் சன்னதி, மலைக்கோவில் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.

கலெக்டர் ஆய்வு

பின்னர் கோவிலின் மேல் தளங்களில் ஏறி பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார். மேலும் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட மேற்கு கோபுர வாசலை பார்வையிட்டு குடமுழுக்கு விழா முடியும் வரை மேற்கு கோபுர வாசல் வழியாக செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாவை கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து கோவிலுக்குள் குடிநீர், சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் கேட்டறிந்தார். அப்போது கோவில் சார்பில் பல்வேறு இடங்களில் 60-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், பல்வேறு இடங்களில் குடிநீர் வசதி, மேலும் குடமுழுக்கை காணும் வகையில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டம்

மேலும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கூடுதலாக போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும் எனவும் கோவில் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், தமிழ்ச்சங்கத் தலைவர் மார்கோனி, நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழா குறித்த விவரங்களை...

தொடர்ந்து கோவில் இருந்த தருமபுரம் ஆதீனத்தை கலெக்டர் சந்தித்து குடமுழுக்கு விழா குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், தி.மு.க. நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், திருப்பணி உபயதாரர் முரளிதரன், வர்த்தக சங்க நிர்வாகி ரஜினி துரை, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பந்தல் முத்து, கோவி நடராஜன், கோவில் நிர்வாகி செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்