அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்கும் வரை அ.தி.மு.க.வின் போராட்டம் தொடரும்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும் வரை அ.தி.மு.க. போராட்டம் தொடரும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Update: 2023-05-29 21:53 GMT

வாடிப்பட்டி,

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும் வரை அ.தி.மு.க. போராட்டம் தொடரும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய உயிரிழப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் வாடிப்பட்டியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூர் செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, எஸ்.எஸ்.சரவணன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சோலை, மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி, கவுன்சிலர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

தற்போது எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி நாள்தோறும் நடந்து வருகிறது. இதனால் தி.மு.க. அரசின் மீது மக்கள் வெறுப்பு அடைந்துள்ளனர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வந்த அனைத்து நலத்திட்டங்களையும் முடக்கி வைத்து விட்டது. எந்தவித நலத்திட்டங்களும் தற்போது நடைபெறவில்லை.

பதவி நீக்க வேண்டும்

மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும், மருமகன் சபரீசனும் ரூ.30 ஆயிரம் கோடியை கொள்ளையடித்து எங்கே வைப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னது ஆர்.பி. உதயகுமார் அல்ல. நான்கு தலைமுறைக்கு சொந்தக்காரர், நான்கு தலைமுறை இயக்க அரசியல் பங்கெடுத்தவர்கள், மதுரை மண்ணின் மைந்தர் அன்பு சகோதரர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

இன்றைக்கு கள்ளச்சாராயம் குடித்த 25 பேர் உயிர் பறிபோய் இருக்கிறது. இதை தட்டி கேட்கின்ற வகையில் மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க தயாரா என இந்த கேட்கிறேன். கள்ளச்சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கு காரணமான அந்த துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும். அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் வரை அ.தி.மு.க. போராட்டம் தொடரும். இவர் அவர் பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் ராமசாமி, பேரூர் பேரவை செயலாளர் தனசேகரன், மருதையா, ரவி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரூர் துணைச்செயலாளர் சந்தன துரை நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்