சிறுபான்மையினரின் வாக்கு ஒருபோதும் அ.தி.மு.க.விற்கு கிடைக்காது

சிறுபான்மையினரின் வாக்கு ஒருபோதும் அ.தி.மு.க.விற்கு கிடைக்காது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

Update: 2023-10-25 18:22 GMT

ரேஷன் கடை திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், 9 ஏ நத்தம்பண்ணை ஊராட்சி, அபிராமி நகரில், கூட்டுறவுத்துறையின் சார்பில், புதிய பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர் மன்ற துணைத்தலைவர் லியாகத் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கவர்னர் வரம்புமீறி...

தொடர்ந்து அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆட்சி மாற்றம் ஏற்படும் போது கடந்த முறை ஆட்சி செய்தவர்கள் தொடங்கிய திட்டத்தை ஆட்சி செய்பவர்கள் திறந்து வைப்பது வழக்கமான ஒன்று என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது போன்று அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கிய திட்டத்தை தான் நாங்கள் தொடங்கி வைக்கிறோம் என்று கூறுவது தவறு. கிங்ஸ் மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட பல திட்டங்கள் தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கியது தான். ஒரு சில திட்டங்கள் மட்டும் அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டதை நாங்கள் தொடங்கி வைத்துள்ளோம். அது இயற்கையான ஒன்று.

ஒரு கவர்னர் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி செயல்பட கூடாது என்பதற்கு அளவுகோல் உள்ளது. ஆனால் தமிழக கவர்னர் வரம்புமீறி பேசியதற்கு டி.ஆர். பாலு விளக்கம் கொடுத்துள்ளார்.

சிறுபான்மையர்கள் வாக்கு

இந்த வரலாறு எல்லாம் தமிழில் இருப்பதால் கவர்னருக்கு புரியவில்லை. அவர் யாரோ எழுதிக் கொடுத்ததை வாசிக்கிறார். காங்கிரஸ் தி.மு.க.வை வளர்க்க வேண்டியதில்லை. தி.மு.க. ஏற்கனவே வளர்ந்த கட்சி தான். நாங்கள் எங்களை வளர்த்துக் கொள்கிறோம். அவர்கள் அவர்களை வளர்த்துக் கொள்கிறார்கள். பா.ஜ.க.வின் பி டீம் தான் அ.தி.மு.க., சிறுபான்மையினரின் வாக்கு ஒருபோதும் அ.தி.மு.க.விற்கு கிடைக்காது. சிறுபான்மையினருக்கு எதிராக சட்டங்கள் கொண்டு வந்த போது எடப்பாடி பழனிசாமி எங்கே சென்றார். எங்கே போய் ஓடி ஒளிந்து கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி பிரதமராக அனைத்து வாய்ப்புகளும் உள்ளது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி இருப்பது, ரொம்ப மகிழ்ச்சியான செய்தி. அவர் எப்போதுமே நகைச்சுவையாக பேசக்கூடியவர். இதை ஒரு நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளலாம். மகளிர் உரிமை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் என்று அரசு உத்தரவிட்டது பொதுமக்களுக்கு லாபம் தான். தகுதியான நபர்கள் இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிமை தொகை போய் சேரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்