செந்தில் பாலாஜியை பதவி நீக்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு 21-ந்தேதி ஆர்ப்பாட்டம்

செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு 21-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2023-06-16 18:44 GMT

சென்னை,

2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க. கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு வகைகளில் மக்கள் விரோத அரசாக இருந்து வருகிறது. மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி, குடிநீர், கழிவு நீர் இணைப்பு முதலானவற்றின் கட்டணங்களை உயர்த்தி மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு கூட மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

இதை தமிழக அரசு கண்டும் காணாமல் இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித்தருவதாக லஞ்சம் பெற்றுக்கொண்டு அப்பாவி இளைஞர்களை ஏமாற்றிய வழக்கில் அமலாக்கத் துறையால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவரது செயலால் தமிழ் நாட்டிற்கு மிகுந்த அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம்

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று கவர்னரிடம் அ.தி.மு.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு வலியுறுத்தப்பட்டது. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை நீக்காதது, தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

இதை கண்டித்தும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும், செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் 21-ந்தேதி காலை 10 மணியளவில், கலெக்டர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை, வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும். இதில் அ.தி.மு.க.வின் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்