பட்டா மாற்றம் செய்து தரக்கோரி அ.தி.மு.க. பிரமுகர் தர்ணா போராட்டம்

பட்டா மாற்றம் செய்து தரக்கோரி அ.தி.மு.க. பிரமுகர் தர்ணா போராட்டம் நடத்தினார்.

Update: 2022-09-08 17:50 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மணி (வயது 50). இவர் தனது பூர்வீக சொத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்து தருமாறு, பாளையம்புதூர் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் பெயர் மாற்றம் செய்து பட்டா வழங்க காலதாமதம் செய்து வருவதாக கூறி அதை கண்டித்து நேற்று பாளையம்புதூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வருவாய் ஆய்வாளர் ருக்குமணி தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க. பிரமுகர் மணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உங்களது கோரிக்கை குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து மணி போராட்டத்தை கைவிட்டார்.

காலதாமதம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, 'அ.தி.மு.க பிரமுகர் மணி, அவரது பூர்வீக சொத்திற்கு பெயர் மாற்றம் செய்து பட்டா வழங்கிட விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட சொத்திற்கு வில்லங்க சான்று வழங்காமலும், மனுதாரர் வாக்குமூலம் வழங்காமல் கால தாமதம் செய்து வந்ததால், அவருக்கான பட்டா மாற்றம் செய்து வழங்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது' என்றார்கள். இந்த சம்பவம் குறித்து பாளையம்புதூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்