எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் நாளை அ.தி.மு.க. மாநாடு

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாநில மாநாடு மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Update: 2023-08-18 20:41 GMT

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாநில மாநாடு மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. மாநாடு

அ.தி.மு.க. மாநில மாநாடு, மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும், இந்த மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.

சுமார் 65 ஏக்கர் பரப்பளவில், மாநாட்டிற்கான இடம் தயார் செய்யப்பட்டது. மாநாடு அரங்கத்தின் நுழைவு வாயிலில் கோட்டை போல் வரவேற்பு அரங்கம் வடிவமைக்கப்பட்டு, அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ அமைப்பும், எடப்பாடி பழனிசாமி படமும் வைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டு பந்தல் மட்டும் 5 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ளது. அதில் மிகப்பெரிய மேடையும் அமைக்கப்பட்டுள்ளது, அதில் அலங்கார பணிகள் நேற்று மும்முரமாக நடந்தன. பந்தல் முழுவதும் இருக்கைகள் போடப்படும் பணியும் நடந்தது.

300 ஏக்கர்

இந்த மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த 300 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டு பணிகளை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் இரவு பகலாக கண்காணித்து வருகி்ன்றனர்.

கடந்த 13-ந் தேதி மாநாட்டு பணிகளை எடப்பாடி பழனிசாமியும் நேரில் வந்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கி சென்றார். மாநாட்டிற்கான அனைத்து பணிகளும் இன்று காலைக்குள் முழுவதுமாக முடிந்துவிடும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சி விவரம்

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக, நாளை காலை அ.தி.மு.க. கொடியேற்றப்படுகிறது. அ.தி.மு.க. தொடங்கி 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் விதமாக 51 அடி உயர கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியேற்றுகிறார்.

அதன்பின் அவர் கட்சி தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். ஜெயலலிதா பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் இந்த அணிவகுப்பு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க கண்காட்சியினை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மாநாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகள், கவியரங்கம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

15 லட்சம் பேர்

அதன்பின் மாலை 4 மணிக்கு மாநாட்டு உரை தொடங்குகிறது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்று பேசுகின்றனர்.

தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்கள் பேசுகின்றனர். மாலை 5 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு உரை நிகழ்த்துகிறார். அதன்பின் நன்றியுரையுடன் மாநாடு நிறைவடைகிறது.

இந்த மாநாட்டில் சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் மாநாட்டின் பாதுகாப்பிற்காக தனியார் செக்யூரிட்டி நிறுவனம் சார்பில் சுமார் ஆயிரம் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்