அ.தி.மு.க. மதுரை மாநாடு விளம்பரங்களை அதிகாரிகள் அழிக்க சென்றதால் பரபரப்பு

திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் சுவர்களில் எழுதப்பட்ட அ.தி.மு.க. மதுரை மாநாடு விளம்பரங்களை அதிகாரிகள் அழிக்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-15 19:13 GMT

திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் சுவர்களில் எழுதப்பட்ட அ.தி.மு.க. மதுரை மாநாடு விளம்பரங்களை அதிகாரிகள் அழிக்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்சியினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்கு வாதம் செய்தனர்.

அ.தி.மு.க. மதுரை மாநாடு

மதுரையில் நடக்கும் அ.தி.மு.க. மாநாட்டுக்காக திருப்பத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை பாலங்களில் உள்ள சுவர்களில் அ.தி.மு.க.வினர் சுவர் விளம்பரம் எழுதி வருகிறார்கள். நேற்று திருப்பத்தூர்-திருவண்ணாமலை சாலையில் வெங்கலாபுரம் அருகே அ.தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் மதுரை மாநாட்டுக்காக எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களை நெடுஞ்சாலைத்துறை சார்பில் அதிகாரிகள், கூலியாட்களை வைத்து வெள்ளையடித்து அழிக்க சென்றனர்.

இதையறிந்த அ.தி.மு.க.வினர் நகர செயலாளர் டி.டி.குமார், ஒன்றிய செயலாளர் டாக்டர் திருப்பதி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து சுவற்றில் எழுதிய விளம்பரத்தை அழிக்கக்கூடாது, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் எழுதி உள்ள சுவர் விளம்பரங்களை அழித்து விட்டு வாருங்கள், அதன் பிறகு நாங்களும் எங்கள் விளம்பரங்களை அழித்து விடுகிறோம், எனக் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அனைத்து விளம்பரங்களும் அழிக்க ஏற்பாடு செய்துள்ளோம், எனத் தெரிவித்தனர்.

அழிக்காமல் திரும்பி சென்றனர்

அதற்கு அ.தி.மு.க.வினர், தாங்கள் சுவற்றின் மீது கை வைத்தால் நாங்கள் சாலை மறியலில் ஈடுபடுவோம், எனக் கூறியதால், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு, அ.தி.மு.க. மதுரை மாநாடு சுவர் விளம்பரங்களை அழிக்காமல், திரும்பி சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்