'அ.தி.மு.க. மாநாடு அரசியலில் திருப்பு முனையாக அமையும்'

மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாடு அரசியலில் திருப்பு முனையாக அமையும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2023-08-09 20:15 GMT

ஆலோசனை கூட்டம்

பழனி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார்.

சட்டமன்ற தொகுதி நிர்வாகி ரவி மனோகரன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அன்வர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெறும் மாநாடு வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக அமையும். இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆர்வத்தோடு கலந்துகொள்ள தயாராக உள்ளனர். இதற்காக அந்தந்த சட்டமன்ற தொகுதி அளவில் கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பழனியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

முடிந்துபோன சகாப்தம்

மதுரை மாநாட்டில் குறைந்த பட்சம் 25 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள். எனவே இந்த மாநாடு அரசியல் திருப்புமுனை மாநாடாக அமையும். மேலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி.

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம். ஓ.பன்னீர்செல்வம் முடிந்துபோன சகாப்தம். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், முன்னாள் எம்.பி. குமாரசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன் (கிழக்கு), முத்துசாமி (மேற்கு), கொடைக்கானல் நகர செயலாளர் ஸ்ரீதர், கீழ்மலை ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், மேல்மலை ஒன்றிய செயலாளர் பொன்னுதுரை, மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் மகுடீஸ்வரன், விவசாய பிரிவு செயலாளர் அக்கீம், பெரியம்மாபட்டி ஊராட்சி தலைவர் சதீஸ்குமார், பண்ணாடி ராஜா, பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது, தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவர் குகன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்