அ.தி.மு.க. போராட்டங்கள் தொடரும் -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் ஊழல், மக்கள் விரோத செயல்கள் இனியும் நடந்தால், அ.தி.மு.க. போராட்டங்கள் தொடரும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் பல்வேறு வரலாற்றுச் சாதனைகள் படைக்கப்பட்ட ''அ.தி.மு.க.'', இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு, அவர்கள் பயணித்த வழியிலேயே தொடர்ந்து பீடுநடைபோட்டு மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது தி.மு.க., கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள்; கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு; கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்தும்; முதல்-அமைச்சரின் குடும்பத்தினர் ரூ.30 ஆயிரம் கோடிக்குமேல் குவித்து, இந்த ஊழல் வருமானத்தை வழக்கமான வருமானத்தில் இணைக்க வழி தெரியாமல் திணறுவதாக, முன்னாள் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனே பேசிய உரையாடல் மூலம், அரசாங்கத்தில் நிலவும் ஊழலை ஒப்புக்கொள்வது தெளிவாகி உள்ளது.
நெஞ்சார்ந்த நன்றி
இந்த நிலையில், தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதைக் கண்டித்தும், இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும்; தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள்; சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகள்; கொலை, கொள்ளை, வழிப்பறி, கள்ளச் சாராயம், போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவைகளை கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க. அரசின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 22-5-2023 அன்று அ.தி.மு.க. சார்பில் நான், கவர்னரிடம் மனு அளித்ததைத் தொடர்ந்தும், அ.தி.மு.க. சார்பில் 29-5-2023 அன்று (நேற்று), சென்னை மாவட்டங்கள் தவிர, அ.தி.மு.க. அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அரசுக்கு எதிராக அ.தி.மு.க. நடத்திய மாபெரும் போராட்டத்தின் குரல் இன்று தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலித்தது. கண்டன ஆர்ப்பாட்டங்களை மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திய மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும், தலைமைக் கழகச் செயலாளர்களுக்கும்; கண்டன ஆர்ப்பாட்டங்கள் சிறப்புற நடைபெறுவதற்கு உடனிருந்து ஒத்துழைப்பு நல்கிய மாவட்ட நிர்வாகிகளுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்; அ.தி.மு.க. மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும்; குறிப்பாக, கண்டன ஆர்ப்பாட்டங்களில் எழுச்சியுடன் வந்து கலந்துகொண்ட பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
போராட்டம் தொடரும்
தமிழகத்தில் ஊழல்கள் மற்றும் மக்கள் விரோதச் செயல்கள் இனியும் தொடருமேயானால் தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை, மக்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.