மோசடியில் ஈடுபட்ட நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெமிலியில் அ.தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெமிலியில் அ.தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மோசடி
பங்கு சந்தையில் முதலீடு செய்து, ஒரு லட்சம் ரூபாய்க்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை வட்டி தருவதாக கூறி ஆருத்ரா, ஐ.எப்.எஸ். போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் ஒவ்வொரு பகுதியிலும் ஏஜெண்டுகள் மூலம் பொது மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளனர். அதேபோல் நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான சயனபுரம், சேந்தமங்கலம், திருமால்பூர், பனப்பாக்கம், வேட்டாங்குளம், கீழ்வீதி, சிறுணமல்லி, சம்பத்ராயன்பேட்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் கோடி கணக்கில் வசூல் செய்து நிதி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
நிதி மோசடியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களின் பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனக்கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
ஆர்ப்பாட்டம்
பொதுமக்களிடம் கோடிக்கணக்கான நிதியை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு மெத்தனமாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை முன் வரவேண்டும் என வலியுறுத்தி நெமிலி பஸ்நிலையத்தில் அ.தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சு.ரவி தலைமைதாங்கினார். சோளிங்கர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத், ஏ.ஜி.விஜயன், அருணாபதி, பழனி, சீனிவாசன், நவநீதகிருஷ்ணன், முருகன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.