மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் அ.தி.மு.க.வினர் மறியல்; 455 பேர் கைது

எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 455 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-19 18:45 GMT

அ.தி.மு.க.வினர் மறியல்


எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரித்து சட்டசபையில் இருக்கை ஒதுக்காததை கண்டித்து சென்னையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டம் நடந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அதன்படி திண்டுக்கல்லில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாரதிமுருகன், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளிதரன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வி.டி.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


அப்போது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை கைது செய்ததை கண்டித்து கோஷமிட்டனர். இந்த மறியலால் திண்டுக்கல்-திருச்சி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகள் உள்பட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.


நத்தம்


இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 11 இடங்களில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் நத்தம் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் ஆர்.வி.என். கண்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சிவலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், மணிகண்டன், சின்னு, சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பஸ் நிலையத்துக்குள் ஊர்வலமாக வந்த அ.தி.மு.க.வினர், ரவுண்டானா முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்தின்போது சபாநாயகர் மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர், பார்வதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் வேலம்பட்டி கண்ணன், ஆண்டிச்சாமி, ஜெயப்பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.


வத்தலக்குண்டு, வேடசந்தூர்


வத்தலக்குண்டுவில் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் ஈடுபட்ட நகர செயலாளர் பீர்முகமது, நிர்வாகிகள் துரைராஜ், கனி பாய் உள்பட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.


வேடசந்தூர் ஆத்துமேடு நால்ரோட்டில் அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனியம்மாள், வேடசந்தூர் நகர செயலாளர் பாபுசேட், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட துணை செயலாளர் ஜான்போஸ், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் நிலாதண்டபாணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அம்மையப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.


வடமதுரை


வடமதுரை மற்றும் அய்யலூரில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, வடமதுரை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் லட்சுமணன், மேற்கு ஒன்றிய செயலாளர் தண்டாயுதம், நகர செயலாளர்கள் பாலசுப்பிரமணியன் (வடமதுரை), ராகுல்பாபா (அய்யலூர்) மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.


செம்பட்டி நால்ரோடு பகுதியில் அ.தி.மு.க.வினர் ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மணலூர் சின்னச்சாமி தலைமையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மயில்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்துெகாண்டனர். இந்த மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.


நிலக்கோட்டை


நிலக்கோட்டை நால்ரோட்டில் கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.பி. உதயகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் தண்டபாணி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் சீனிவாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன், கிழக்கு ஒன்றிய அவை தலைவர் தவமணி, மாவட்ட வக்கீல் பிரிவு துணை செயலாளர் புரட்சிமணி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய துணை செயலாளர் ஜெயசீலன், மாவட்ட பொறுப்பாளர்கள் சிமியோன், ஜேசுராஜ், சரவணகுமார், ஜெயலலிதா பேரவை நகர பொறுப்பாளர் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.


ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், அம்பிளிக்கை ஊராட்சி மன்றத் தலைவருமான என்.பி.நடராஜ், நகர செயலாளர் நடராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் அப்பன் என்ற கருப்புசாமி, சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் உதய ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.


455 பேர் கைது


குஜிலியம்பாறையில் அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு குஜிலியம்பாறை அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், பாளையம் அ.தி.மு.க. பேரூர் செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.


இதில் மாவட்டத்தில் 11 இடங்களில் நடந்த மறியலில் மொத்தம் 455 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்