சேலத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2023-06-21 19:30 GMT

தமிழக அரசை கண்டித்து சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சேலம் புறநகர், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசை கண்டித்து நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன், மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் ஆகியோர் தலைமை தாங்கினர். சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாலசுப்பிரமணி, ராஜமுத்து, சித்ரா, ஜெய்சங்கரன், நல்லதம்பி, மணி, சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் கல்யாண சுந்தரம் தமிழக அரசை கண்டித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட நிலையில் செந்தில்பாலாஜியை ஏன்? அமைச்சரவையில் இருந்து நீக்கவில்லை. ஆட்சிக்கு வந்தால் செந்தில்பாலாஜி சிறை செல்வார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அமலாக்கத்துறை நடவடிக்கை

ஆனால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டும் நடவடிக்கை இல்லை. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், செந்தில்பாலாஜிக்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. மூத்த அமைச்சர்கள் மருத்துவமனையில் இருந்த போது சென்று பார்க்காதவர்கள் ஏன்? செந்தில்பாலாஜியை மட்டும் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்க்க வேண்டும்.

சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு ரூ.70 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஒப்பந்தப்புள்ளி செந்தில்பாலாஜி நண்பருக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதன்மூலம் கிடைத்த ஊழல் பணம் கைமாறி இருப்பது தான் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

கள்ளச்சாராய சாவு

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் கள்ளச்சாராயத்தால் பலர் உயிர் இழந்து உள்ளனர் என்று கூறினார். அப்போது ஆளுங்கட்சியினர் கள்ளச்சாராயம் இல்லை என்று கூறினார்கள். ஆனால் அதற்கு பிறகு கள்ளச்சாராயம் விற்ற 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சமீபத்தில் ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற அராஜகமே சட்டம், ஒழுங்கு சீர்கேட்டிற்கு எடுத்துக்காட்டாகும்.

இவ்வாறு செம்மலை கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செங்கோட்டையன், துணை செயலாளர் தங்கராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு, பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்