நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம்

Update: 2022-07-25 17:38 GMT

வெளிப்பாளையம்:

மின்கட்டண உயர்வை கண்டித்து நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாகை அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தங்க கதிரவன் முன்னிலை வகித்தார். அமைப்பு செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதுடன், வீடுகளில் உள்ள மீட்டர்களுக்கும் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தி.மு.க. அரசு எந்த ஒரு திட்டத்தையும் இதுவரை அமல்படுத்தவில்லை.

பொய் பிரசாரம்

மாறாக அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவது எப்படி என்று யோசித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் மக்களிடம் ஓட்டுக்களை வாங்க வேண்டும் என தி.மு.க.வினர் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கல்விக்கடன், பழைய ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வம் அணியால் அ.தி.மு.க.விற்கு பாதிப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்