வண்டலூர் அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் 4 பேர் கைது

வண்டலூர் அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-10-25 21:31 IST

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலம் பொன்மார் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் டி.ரவி, இவர் வேங்கடமங்கலம் முன்னாள் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவரது மனைவி கல்யாணி ரவி, தற்போது வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர்களது மகன் அன்பரசு (வயது 28), வேங்கடமங்கலம் 9-வது வார்டு ஊராட்சி மன்ற கவுன்சிலராகவும், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில் அன்பரசு கடந்த 21-ந்தேதி கீரப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சி படத்திறப்பு விழாவுக்கு நண்பர்களுடன் காரில் சென்றார். பின்னர் அதே காரில் வேங்கடமங்கலம் நோக்கி நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தார்.

கீரப்பாக்கம் சுடுகாடு அருகே வரும்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரது காரை வழிமறித்து அவர்கள் கையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை கார் மீது வீசியது. இதில் கார் கண்ணாடிகள் நொறுங்கியது. காரில் இருந்த அன்பரசு மற்றும் அவரது நண்பர்கள் தப்பித்து ஓடும் போது அந்த 4 பேர் கொண்ட கும்பல் அன்பரசுவை மட்டும் விடாமல் துரத்தி சென்று வீச்சரிவாளால் சரமாரியாக உடலில் பல்வேறு இடங்களில் வெட்டியது. இதில் அன்பரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அன்பரசு கொலை வழக்கில் கேளம்பாக்கம் மாதா கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி (வயது 23), ஒத்திவாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுதர்சன என்கிற சுனில் ( 19), ஆகிய இருவரும் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரணடைந்தனர்.

சரணடைந்த பாலாஜி, சுனில் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கீரப்பாக்கத்தை சேர்ந்த 18 வயதானவர், நெடுங்குன்றம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த ரத்தினம் என்கிற நெடுங்குன்றம் ரத்தினம் (வயது 24), ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சரணடைந்த 2 பேர் மற்றும் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து 4 பேரையும் காயார் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய சில நபர்களை காயார் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்