ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க. தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்; கட்சிக்கொடியை அரைகம்பத்தில் பறக்க விட்டதால் பரபரப்பு

நிலக்கோட்டை அருகே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க. தொணடர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கட்சிக்கொடியை அரைகம்பத்தில் பறக்க விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-23 14:47 GMT

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே திடீரென்று வெளியேறினார். அப்போது அவரை சிலர் தாக்க முயன்றதுடன், ஓ.பன்னீர்செல்வத்தின் பிரசார வாகனத்தை பஞ்சர் ஆக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசிய சம்பவமும் அரங்கேறியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க. கிளை துணை செயலாளர் சகாயம் தலைமையில் தொண்டர்கள் சிலர் கட்சிக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். மேலும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்க வேண்டும். அவரை தாக்க முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மைக்கேல்பாளையத்தில் நிலக்கோட்டை-செம்பட்டி சாலையில் உள்ள கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை அரைகம்பத்தில் பறக்கவிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்