அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளத்தில் தவறாக சித்தரித்த அ.தி.மு.க பிரமுகர் கைது

அமைச்சர் துரைமுருகனை சமூக வலைதளத்தில் தவறாக சித்தரித்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பொள்ளாச்சி அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-04-05 23:02 IST

தவறாக சித்தரிப்பு

அமைச்சர் துரைமுருகன் கடந்த 29-ந்் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசும்போது, தன்னுடைய மரணத்திற்கு பிறகு தனது கல்லறையில் 'இங்கே கோபாலபுரத்து விசுவாசி உறங்குகிறான்' என எழுதினால் போதும் என உருக்கமாக பேசினார். இதனை சிலர் அமைச்சர் துரைமுருகன் புகைப்படத்தை ஒரு கல்லறையில் உள்ளது போன்று சித்தரித்து சில வாசகங்களையும் குறிப்பிட்டு, அதனுடன் ஆடியோவை இணைத்து வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு வதந்தி பரப்பி பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்படி காட்பாடி வடக்கு பகுதி தி.மு.க. செயலாளர் வன்னியராஜா காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அ.தி.மு.க. பிரமுகர் கைது

இது தொடர்பாக அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பொள்ளாச்சி அருண்குமார் என்பவரிடம் காட்பாடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அமைச்சர் துரைமுருகன் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிறக்கம் செய்து, தவறாக சித்தரித்து ஆடியோவை இணைத்து வீடியோவாக பதிவேற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

அமைச்சர் துரைமுருகன் பற்றி தவறான பதிவேற்றங்களை முகநூல் பக்கங்களில் இருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காட்பாடி போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்