போலி பணி நியமன ஆணை வழங்கிய அ.தி.மு.க. பிரமுகர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் பெற்றுக்கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கிய அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-10-18 19:19 GMT

காகித ஆலை

திருச்சி பாலக்கரை தெற்கு கல்லுக்கார தெருவை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் வேலை தேடி வந்துள்ளார். இந்தநிலையில் கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் வேலை இருப்பதை அறிந்து அதற்கான எழுத்து தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளார்.

இந்தநிலையில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த கரூர் மாவட்டம் சின்னகோதுமை பகுதியை சேர்ந்த சிவராஜ் (என்கிற) சிவக்குமார் (42), வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த செந்தில் ஆகியோர் சுரேந்திரனின் தந்தையிடம் தமிழ்நாடு காகித ஆலையில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கான பணி நியமன ஆணையை சுரேந்திரனிடம் கொடுத்ததுடன் பணி நியமன ஆணைக்காக ரூ.12 லட்சம் பெற்றுக்கொண்டதாக தெரிகிறது.

அ.தி.மு.க. பிரமுகர் கைது

இதையடுத்து, சுரேந்திரன் அந்த பணி நியமன ஆணையை எடுத்துக்கொண்டு தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் வேலைக்கு சேர சென்று உள்ளார். அப்போது அந்த பணி நியமன ஆணை போலியானது என தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுரேந்திரன் இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் வழக்குப்பதிவு செய்து போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகர் சிவராஜ் (எ) சிவக்குமாரை கைது செய்தார். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள செந்திலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்