தமிழகத்தின் மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க.: 100 நாட்களில் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து எடப்பாடி பழனிசாமி சாதனை- ஆர்.பி.உதயகுமார் பேட்டி

தமிழகத்தின் மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க. தான். கடந்த 100 நாட்களில் 2 கோடி பேரைஅ.தி.மு.க. உறுப்பினர்களாக சேர்த்து எடப்பாடி பழனிசாமி சாதனை படைத்துள்ளார் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Update: 2023-08-06 21:07 GMT


தமிழகத்தின் மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க. தான். கடந்த 100 நாட்களில்2 கோடி பேரைஅ.தி.மு.க. உறுப்பினர்களாக சேர்த்து எடப்பாடி பழனிசாமி சாதனை படைத்துள்ளார் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மரக்கன்றுகள்

மதுரையில் வருகிற 20-ந் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடக்கிறது. அதில் மதுரையில் இருந்து ஒரு லட்சம் குடும்பங்களை பங்கேற்க வைப்பதற்காக ஜெயலலிதா பேரவை சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி உலக தமிழ் சங்கம் அருகே நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி மரக்கன்றுகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சாமானியர்களின் முதல்-அமைச்சராக சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் பல லட்சம் மக்கள் கலந்து கொள்கின்றனர். எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து திட்டம், ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனை, உயர்மட்ட பாலங்கள், சாலைகள், நீர்நிலைகள், பள்ளி, கல்லூரி கட்டிடங்கள், சமூக நலத்திட்டங்கள் என வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி கொடுத்தார். அதனால் தான் அவரது தலைமையை ஏற்று 100 நாட்களில் 2 கோடியே 44 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் உறுப்பினராக இணைந்துள்ளனர். உலக அளவில் ஒரு மாநில கட்சிக்கு இவ்வளவு உறுப்பினர்கள் இருப்பது வரலாற்று சாதனை. அந்த சாதனையை எடப்பாடி பழனிசாமி நிகழ்த்தி காட்டி இருக்கிறார். தமிழகத்தின் மிகப்பெரிய கட்சி எப்போதும் அ.தி.மு.க. தான் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

மீனவர்கள் கேள்வி

கடந்த சட்டசபை தேர்தலில் நூலிழையில் தான் ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஆனால் மக்கள் மனதிலும் இன்றைக்கும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சராக இருந்து வருகிறார். கச்சதீவை தாரை வார்த்த தி.மு.க., இப்போது மீனவர்கள் மாநாட்டினை 18-ந் தேதி ராமநாதபுரத்தில் நடத்துகிறது. மீனவர்களின் உரிமையை பறித்து விட்டு, முதல்-அமைச்சர் ஸ்டாலின் இதில் பங்கேற்பதில் என்ன லாபம் என்று மீனவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தை, வளமிகு மாவட்டமாக உருவாக்க காவிரி குண்டாறு நதி நீர் இணைப்பு திட்டம், நடந்தாய் வாழி காவிரி திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த திட்டங்கள் இப்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இந்த அரசு விளம்பர வெளிச்சத்தில் உள்ளது. விழாக்களுக்கு குறைவில்லை, மக்களுக்கு நன்மை இல்லை. ஒரே மாதிரி பயனாளிகளை வைத்து கொண்டு தொடர்ந்து விழா நடத்துகிறார்கள். இந்த அவல ஆட்சிக்கு, மதுரை மாநாடு முற்றுப்புள்ளி வைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்