அ.தி.மு.க.தான் ஜனநாயகக் கட்சி; தி.மு.க. வாரிசுக் கட்சி - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

மாநில உரிமைகளை காக்க அ.தி.மு.க. போராடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2024-02-08 08:21 GMT

சேலம்,

நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நாமக்கல் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என நிரூபித்தவர் முன்னாள் அமைச்சர் தங்கமணி. எதிரிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த ஐ.டி.விங் நிர்வாகிகள் பாடுபட வேண்டும். சாதனைகளை சமூக வலைதளங்கள் வாயிலாக கொண்டு சேர்ப்பது ஐ.டி.விங்கின் கடமை. அதன்படி நமது ஆட்சியின் சாதனைகளை சமூக வலைதளங்கள் வாயிலாக கொண்டு சேர்ப்பது உங்கள் (ஐ.டி.விங்) கடமை.

சமூகவலைதளங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது மாற்றுக்கட்சியினர் நமக்கு எதிராக செயல்படும் செயல்களை முறியடிக்க வேண்டும். அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்போருக்கு மரணஅடி கொடுக்கும் விதமாக ஐ.டி.விங் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். அ.தி.மு.க. மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சி.

இன்றைய ஆட்சியாளர்கள் பணத்தை நம்பி உள்ளார்கள், பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என்ற பகல் கனவில் உள்ளார்கள். நாம் மக்களை நம்பி உள்ளோம். அ.தி.மு.க.தான் ஜனநாயகக் கட்சி. தி.மு.க. வாரிசுக் கட்சி. அ.தி.மு.க.வில்தான் கிளைச்செயலாளர், பொதுச்செயலாளர் ஆவது சாத்தியம்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும். வாக்காளர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவது நமது கடமை. மாநில உரிமைகளை காக்க அ.தி.மு.க. போராடும். தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பிரிந்தோம். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும். இந்தியா கூட்டணி தொடர்ந்து வலிமை இழந்து வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வசனங்களை பேசி மக்களை ஏமாற்றி வருகிறார். மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு தி.மு.க. சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு ஸ்பெயின் நிறுவனங்களை அழைத்து ஏன் ஒப்பந்தம் செய்யவில்லை?. ஸ்பெயினில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு? என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா?. இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்