விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும்
வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறினார்.
வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறினார்.
மின் கட்டணம்
விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-
மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்தவில்லை மானியத்தை தான் திரும்ப பெற்றுள்ளது. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தகவல் பரிமாற்றத்தில் உள்ள இடைவெளி காரணமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி விட்டது. தமிழக நிதி அமைச்சர் மானியங்களை பெறுவதில் அக்கறை கொண்டு மத்திய நிதி மந்திரியை சந்தித்து பேசி தீர்வு காண வேண்டும். விருதுநகரில் அம்மா உணவகம் பூட்டப்பட்டுள்ளது. இதனை உடனடியாக திறக்க கோரி அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
நாடாளுமன்ற தேர்தல்
நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடும். பொதுச்செயலாளர் அடையாளம் காட்டும் வேட்பாளரை இத்தொகுதியில வெற்றி பெறச் செய்வோம்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. என்றுமே அரசியல் செய்ததில்லை. பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளது இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அரசியல் செய்த சில அரசியல் கட்சிகளை பற்றி தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
முன்னதாக கலைவேந்தர் எம்.ஜி.ஆர். மன்ற ஆண்டு விழா மற்றும் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி உழைக்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் மாபா பாண்டியராஜன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் மான்ராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமாரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், ஒன்றிய செயலாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.