வாடிப்பட்டியில் அ.தி.மு.க. அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு -மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
அ.தி.மு.க. அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வாடிப்பட்டி,
அ.தி.மு.க. அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
அ.தி.மு.க. அலுவலகம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யூனியன் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா உள்ளார். இவரது கட்சி அலுவலகம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பகுதியில் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு பூச்சம்பட்டி செந்தில், தங்கமலைச்சாமி ஆகிய 2 பேரும் அங்கிருந்தனர்.
அப்போது அலுவலக வாசலில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உள்ளே இருந்த 2 பேரும் வெளியே ஓடிவந்து பார்த்தபோது புகை மண்டலமாக காட்சி அளித்தது. தூரத்தில் மர்ம நபர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர்..
பின்னர்தான், அந்த இடத்தில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு என ெதரியவந்தது.
ஆர்.பி.உதயகுமார்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். வெடிகுண்டு வீசிய கும்பலை தேடிவருகிறார்கள்.
முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வை சேர்ந்த மக்கள் பிரதிநிதியின் அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளனர். தமிழகத்தில் தற்போது எதிர்க்கட்சிகளுக்கு பாதுகாப்பில்லை, மக்கள் பிரதிநிதிக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம்- ஒழுங்கு சீரழிந்துவிட்டது.
சூப்பிரண்டிடம் புகார்
ஏற்கனவே இதே வாடிப்பட்டியில் அ.தி.மு.க.வை சேர்ந்த சோணை என்பவரின் வணிக நிறுவனங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
தற்போது நடந்த சம்பவம் பற்றி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்துள்ளோம், உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார். வெடிகுண்டு வீச்சு சம்பவம் மிகவும் கண்டிக்கதக்கது. வன்முறை கலாசாரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறினால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, மாவட்ட பொருளாளர் வக்கீல் திருப்பதி, யூனியன் தலைவி மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணேசன், பேரூர் செயலாளர் அசோக் குமார், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சோணை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் லட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.