ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு

குடியாத்தம் ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2023-05-24 17:15 GMT

ஒன்றியக்குழு கூட்டம்

குடியாத்தம் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கே.கே.வி.அருண்முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர்.திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் அசோக்குமார் வரவேற்றார்.

வெளிநடப்பு

கூட்டம் தொடங்கியதும் துணைத் தலைவர் அருண்முரளி பொதுநிதி இருப்பு கணக்கை தெரிவிக்க வேண்டும் என்றார். அ.தி.மு.க. உறுப்பினர் இமகிரிபாபு கடந்த பல கூட்டங்களாக பொதுநிதி குறித்து கணக்கு கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் 15-வது நிதி, என்.ஆர்.ஜி.எஸ். பணிகள் குறித்தும் பலமுறை கேட்டும் தெரிவிக்கவில்லை. ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களை பலமுறை நேரில் கேட்டும் தகவல் இல்லை. இதில் வெளிப்படையான தன்மை இல்லை எனக்கூறி அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து துணைத்தலைவர் அருண்முரளி உறுப்பினர்கள் இமகிரிபாபு, சோபன்பாபு, தியாகராஜன், புரட்சி பாரதம் கட்சியின் குட்டிவெங்கடேசன் உள்பட 8 பேர் வெளிநடப்பு செய்தனர்.

அதைத்தொடர்ந்து உறுப்பினர் சரவணன் எனது ஊராட்சியான தட்டப்பாறை ஊராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து ஒன்றிக்குழு உறுப்பினரான எனக்கே தெரியவில்லை. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் என்றார்.

வாக்குவாதம்

உறுப்பினர் மனோகரன் பேசுகையில் ஆரம்பம் முதலே பொதுநிதி கணக்குகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்கப்பட்டும் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. தலைவர் பகுதிக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகிறது என்று கூறி தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சுரேஷ்குமார் பேசுகையில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை. பிரேத பரிசோதனை செய்ய வேலூருக்கு கொண்டு செல்வதால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல் சார் பதிவாளர் அலுவலகம் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சூரியகலா பேசுகையில் :- நத்தமேடு பாலம் அமைக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, தற்போது இப்பணிகள் செய்ய ரூ.50 லட்சம் ஆகும் என்கிறார்கள். கூடுதலாக ரூ.20 லட்சம் ஒன்றிய பொதுநிதியிலிருந்து வழங்க வேண்டும்.

தீபிகாபரத்பேசுகையில்:- கள்ளூர் பகுதியில் பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இழப்பீடு

இதனைத் தொடர்ந்து பேசிய ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் பணிகள் வெளிப்படை தன்மையாக நடைபெற்று வருகிறது. பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் அங்கன்வாடி உள்ளிட்ட கட்டிடங்கள் குறித்து உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகத்தை நகரின் மையப்பகுதியில் உள்ள கொண்டசமுத்திரம் கால்நடை மருத்துவமனை பகுதியில் அமைக்க வேண்டும். அங்குள்ள கால்நடை மருத்துவமனையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்.

மோர்தானா பகுதியில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் மாட்டுகொட்டகை, ஆட்டுக்கொட்டகை உள்ளிட்டவைக்கு வேளாண்மைதுறை, கால்நடைத்துறை சார்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்