நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
திருப்பத்தூர் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
தர்ணா போராட்டம்
திருப்பத்தூர் நகராட்சி கூட்டம், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஏ.ஆர்.சபியுல்லா முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா வரவேற்றார்.
கூட்டம் தொடங்கிய உடனே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கவிதா சரவணன், ராணி சதீஷ், தேவகி ஆகியோர் வார்டுகளில் எந்த வேலையும் நடைபெறவில்லை. குப்பைகள் அகற்றப்படவில்லை,
கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படவில்லை எனக் கூறி கூட்டம் நடைபெற்ற அரங்கத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாரும் வரவில்லை
அப்போது கவுன்சிலர் தேவகி, தனது பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன் என்று கூறினார். அதற்கு பதில் அளித்த தலைவர் சங்கீதா வெங்கடேஷ் அனைத்து பணிகளும் வார்டுகளில் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
மேலும் அ.தி.மு.க. கவுன்சிலர் டாக்டர் வினோதினியை பார்த்து உங்கள் வார்டில் பணிகள் நடைபெறுகிறதா? என கேட்டார். அதற்கு அவர் கடந்த வாரம் எங்கள் பகுதியில் மழை பெய்து வார்டுகளில் வெள்ள நீர் புகுந்தது. அப்போது எங்கள் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டும் நகராட்சி சார்பில் யாரும் வரவில்லை என்றார்.
தலைவர்: அன்று மழையில் நானே நேரில் வந்து மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்டு பணிகளை கவனித்தேன்.
டி.டி.சி. சங்கர் அ.தி.மு.க. அவ்வை நகர் பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது. ஏழு ஆழ்துளை கிணறுகள் சரிவர இயங்கவில்லை. ஒரு ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டரை எடுத்து சென்று இதுவரை மாட்டி தரவில்லை. டெண்டர் வைக்கும் போது எந்த கவுன்சிலருக்கும் தெரிவிப்பதில்லை.
ஜெயராமராஜா ஆணையாளர்: டெண்டர் வைக்கும் போது நோட்டீஸ் போர்டில் ஒட்டப்படும்.
பிரேம்குமார் (தி.மு.க.): எனது வார்டில் புதிய அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார நிலையம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடையை காலிசெய்ய சொல்வதால் உடனடியாக ரேஷன் கடை கட்டித்தர வேண்டும்.
முதன்மை நகராட்சியாக...
தலைவர்: அனைத்துக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் செய்து தரப்படும்.
திருப்பத்தூர் நகராட்சியை பொறுத்த வரை அனைத்து கவுன்சிலர்களும் கட்சி, பாகுபாடு இன்றி ஒரே குடும்பமாக செயல்பட்டு திருப்பத்தூர் நகரில் தூய்மை பணிகள் மற்றும் அனைத்து வசதிகளும் செய்து தமிழகத்திலேயே திருப்பத்தூர் நகராட்சியை முதன்மையாக ஆக்க அனைத்து வசதிகள் செய்ய பாடுபடுவோம் என கூறினார்.