அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான ஐகோர்ட்டு தீர்ப்பு: "சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்" ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என்று பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2022-09-03 00:19 GMT

பெரியகுளம்,

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

ஐகோர்ட்டு தீர்ப்பு வெளியான நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அவரிடம், ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், "இன்று(நேற்று) ஐகோர்ட்டு வழங்கிய இந்த தீர்ப்புக்கு, டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்'' என்று கூறிவிட்டு காரில் சென்னை புறப்பட்டு சென்றார்.

தேர்தல் ஆணையம் தீர்ப்பு

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோர்ட்டில் தீர்ப்புகள் மாறி, மாறி வருகிறது. தேர்தல் ஆணையம் வழங்கும் தீர்ப்பு தான் இறுதி தீர்ப்பு. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் தயவால்தான் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தார். ஆனால் தற்போது அவர் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.

பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதா வகித்த பதவி. இந்த பதவிக்கு யாரையும் உட்கார வைக்க மாட்டோம் என்று இருந்த நிலையில், பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அடம் பிடிக்கிறார். 5, 6 பேர் சேர்ந்து கம்பெனி போல் அ.தி.மு.க.வை நடத்த பார்க்கின்றனர். அது நடக்காது. ஓ.பன்னீர்செல்வம் உயிரோடு இருக்கும் வரை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். இதனை யாராலும் மாற்ற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்