அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது: இரட்டை தலைமை தொடரும்-சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

Update: 2022-08-18 00:23 GMT

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் எழுந்தது.

இந்த நிலையில் கடந்த ஜூன் 23-ந் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூடியது.

பொதுக்குழு

இதில் ஒற்றை தலைமை கொண்டுவர தீர்மானம் இயற்றப்படலாம் என்ற சந்தேகத்தில் சென்னை ஐகோர்ட்டில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்தார். ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானத்தை தவிர கூடுதல் தீர்மானங்கள் இயற்றக்கூடாது என்ற தடை உத்தரவையும் அவர் பெற்றார்,

இதையடுத்து ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் மீண்டும் கூடியது. அதில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

தடை கேட்டு வழக்கு

இந்த பொதுக்குழு கட்சியின் ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் பெறாமல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, வைரமுத்து என்ற பொதுக்குழு உறுப்பினரும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் விசாரித்தார்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் விஜய் நாராயண், வக்கீல் நர்மதா சம்பத், மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், வக்கீல்கள் திருமாறன், ராஜலட்சுமி உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

தீர்ப்பு

அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதி வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது, கட்சி விதிகளில் சில திருத்தங்களை கடந்த 2011-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, அவர் உயிருடன் இருந்த வரை அவை நடைமுறையில் இருந்தது. அவர் மரணத்துக்கு பின்னர் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, அதுதான் இந்த வழக்குகளாக உள்ளது.

அ.தி.மு.க., கட்சி விதிகளின்படி, பொதுச்செயலாளர் பதவி காலியாக இருக்கும்போது, தலைமை கழக செயற்குழு உறுப்பினர்கள் கழக பணிகளை ஆற்றுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் நடந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு வசதியாக அமைந்து விடும்

இதற்கு ஜூன் 23-ந் தேதி நடந்த பொதுக்குழுவில் ஒப்புதல் அளித்து தீர்மானம் இயற்றப்படவில்லை. அதனால், பொதுச்செயலாளர் பதவிக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள இந்த 2 பதவிகளும் காலியாக இருந்ததால், தலைமை கழக செயற்குழு உறுப்பினர்கள் மூலம் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது என்று எதிர்மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை தீவிரமாக பரிசீலித்தேன். கட்சி விதிகளுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சில உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களால் எதிர்காலத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு நடத்தப்படும் தேர்தலில் கூட போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்றால், இந்த சூழ்நிலை எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் வசதியாக அமைந்து விடும்.

ஒரு புள்ளிவிவரமும் இல்லை

ஒரு கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் விருப்பத்தின்படிதான் மாற்றங்களை உருவாக்க வேண்டும். தலைவர்களின் விருப்பத்துக்காக மாற்றக்கூடாது. எதிர்மனுதாரர்களின் கருத்துப்படி, இரட்டை தலைமையின் காரணமாக கட்சியை நிர்வகிக்க முடியவில்லை. அதனால் ஒற்றை தலைமை வேண்டும் என்று அடிமட்ட தொண்டர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். விரும்புகின்றனர் என்று கூறுகின்றனர்.

ஆனால், அவ்வாறு தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு எந்த ஒரு புள்ளிவிவரமும் இல்லை. குறிப்பாக இதே இரட்டை தலைமை முதல்-அமைச்சராகவும், துணை முதல்-அமைச்சராகவும் பதவி வகித்து சுமார் நாலரை ஆண்டுகள் வெற்றிக்கரமாக அரசாங்கத்தை நடத்தியுள்ளது.

ஆய்வு செய்ய வேண்டும்

ஏன் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து கட்சியின் பல முடிவுகளை எடுத்துள்ளனர். தேர்தல் கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட முடிவுகளையும் எடுத்துள்ளனர். அப்படி இருக்கும்போது, திடீரென கடந்த ஜூன் 20-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதிக்குள் கட்சியின் தலைமையில் மாற்றம் வேண்டும் என்று ஒன்றரை கோடி தொண்டர்கள் எப்படி முடிவு செய்தனர்?

அதுவும் 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் இந்த முடிவை தொண்டர்கள் எடுத்துள்ளனர். எனவே, இந்த 2,500 உறுப்பினர்களின் முடிவு தொண்டர்களின் முடிவை பிரதிபலிக்கிறதா? என்பதை கட்சியின் விதிகளை பின்பற்றி ஆய்வு செய்ய வேண்டியதுள்ளது.

இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்

ஜூலை 11-ந் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் அதிகாரம் உள்ள நபரால் கூட்டப்படவில்லை. இந்த கூட்டத்தை அனுமதித்தால், கட்சியின் தொண்டர்கள் பாதிக்கப்படுவார்கள். தலைவர்களின் மாறுபட்ட கருத்தினால், அண்மையில் கூட உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் சின்னத்தை பெற்று போட்டியிட முடியாத நிலைக்கு வேட்பாளர்கள் தள்ளப்பட்டனர் என்று ஆதார ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே கீழ்கண்ட உத்தரவை பிறப்பிக்கிறேன்.

அ.தி.மு.க. விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். தற்காலிக அவைத்தலைவர் எந்த சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தாலும் 5-ல் ஒரு பகுதியினர் ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்குதான் கோரிக்கை மனு கொடுக்க வேண்டும்.

அதிகாரமே இல்லாத அவைத்தலைவர்

பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அதிகாரமே இல்லாத அவைத்தலைவருக்குத்தான் 5-ல் ஒரு பகுதியினர் கூட்டத்தை கூட்ட கோரிக்கை கடிதம் கொடுத்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு கடிதம் கொடுத்து அதில் ஒருவர் மறுப்பு தெரிவித்தால் கூட, சட்டவிரோதமாக பொதுக்குழுவை கூட்ட முடியாது.

ஜூலை 11-ந் தேதி நடந்த பொதுக்குழு தகுதியான நபராலோ அல்லது 15 நாட்கள் முன்னறிவிப்பு செய்தோ கூட்டப்படவில்லை.

எனவே, ஜூன் 23-ந் தேதிக்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறுவதற்கு எவ்வித அடிப்படை காரணமும் இல்லை. அவ்வாறு கூறுவது கற்பனையானது. கட்சி விதிகளை மீறி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூடி மறைக்கும் வகையில் அந்த வாதம் முன்வைக்கப்பட்டு உள்ளது.

செல்லாது

அரசியல் கட்சி தலைமை எடுக்கும் முடிவில் கோர்ட்டு தலையிட முடியாது. அதேசமயம் அந்த நடைமுறையில் மீறல் இருந்தால் கோர்ட்டில் நிவாரணம் கோர எவ்வித தடையும் இல்லை. அதனால் ஜூலை 11-ந் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. செல்லாத அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர அனுமதித்தால் கட்சி தொண்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே ஜூன் 23-ந் தேதிக்கு முன்பு இருந்த நிலையே கட்சியில் தொடர வேண்டும். இரு தலைவர்களின் ஒப்புதலும் இல்லாமல் எந்த பொதுக்குழு, செயற்குழுவும் கூட்டக்கூடாது. ஒற்றை தலைமை குறித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்வது உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்கு பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்ட தடை இல்லை.

கோர்ட்டை நாடலாம்

5-ல் ஒரு பகுதியினர் முறையாக கடிதம் கொடுத்து பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரினால் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ மறுக்கக்கூடாது.

ஒருவேளை இருவருக்கு இடையில் முரண்பாடு இருந்தால், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்கும்படி கோர்ட்டை நாடலாம்.

30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை கட்சி விதிகளின்படி 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும். கூட்டத்தை கூட்டுவது குறித்து 15 நாட்களுக்கு முன்பு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு முறையாக எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட வேண்டும்.

இந்த வழக்குகள் அனைத்தும் முடித்துவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்