அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு, தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
2016-2021 அதிமுக ஆட்சி காலத்தில் தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்ய நாராயணன் (சத்யா). இவர் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவித்துள்ளதாகவும், தன் சொத்து மதிப்பை மறைத்து தி.நகர் தொகுதியில் போட்டியிட்டதாகவும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து 2 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிமான சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. சத்யாவின் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் வடபழனி, நெற்குன்றம் உள்பட 16 இடங்களிலும் திருவள்ளூர், கோவையில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.