"அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும்"- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

“வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும்” என்று சங்கரன்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பாக பேசினார்.

Update: 2023-10-18 18:45 GMT

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், சங்கரன்கோவிலில் நேற்று மாலையில் பொதுக்கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலட்சுமி, மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் ஆகியோர் பேசினர்.

சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சத்துணவு திட்டம்

எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை ஜெயலலிதா கட்டி காத்தார். அவர்கள் இருவரும் என்றும் மக்களின் மனதில் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் 52 ஆண்டுகால அ.தி.மு.க. வரலாற்றில் 30 ஆண்டு காலம் ஆளுங்கட்சியாக இருந்துள்ளோம். அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடம் பிடித்தது. ஏழை-எளிய மக்களுக்காகவே அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தினோம். பள்ளி குழந்தைகளின் பட்டினியை போக்க தொடங்கப்பட்ட சத்துணவு திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்கிறது.

ஆனால், தமிழகத்தில் தற்போது தி.மு.க.வின் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒரு குடும்பத்துக்காகவே தொடங்கப்பட்ட கட்சிதான் தி.மு.க.. இதனை ஒழுங்குபடுத்த கேள்வி கேட்ட எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்தே வெளியேற்றினர். எனினும் பேரறிஞர் அண்ணாவின் கனவை நிறைவேற்ற அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கினார்.

கார்ப்பரேட் கம்பெனி

தி.மு.க. எப்போதும் கார்ப்பரேட் கம்பெனி போன்றே செயல்படுகிறது. அதன் தலைவராக மு.க.ஸ்டாலினும், இயக்குனர்களாக துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, சபரீசன் போன்றவர்களும் உள்ளனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2½ ஆண்டுகளாகியும் எந்தவொரு புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களையே ரிப்பன் வெட்டி திறந்து வைக்கின்றனர். மக்களை பற்றி கவலைப்படாத பொம்மை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். அவர் தென்காசி மாவட்டத்துக்கு எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. ஆனால் அவர், கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று கூறுகிறார்.

பல்வேறு திட்டங்கள்

தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கியது அ.தி.மு.க. ஆட்சியில்தான். மேலும் அங்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அலுவலகங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்கி வைத்தோம். அதனைத்தான் தற்போது ரிப்பன் வெட்டி திறந்து வைக்கின்றனர்.

சங்கரன்கோவில் தொகுதியில் ரூ.1½ கோடியில் எலுமிச்சை ஆராய்ச்சி மையம் மற்றும் ஆடு ஆராய்ச்சி மையம் தொடங்கினோம். சங்கரன்கோவில், ஆலங்குளம் பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றினோம். சங்கரன்கோவிலில் ரூ.43 கோடியில் மறுசீரமைப்பு குடிநீர் திட்டம், ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.133 கோடியில் புதிய சாலைகள், குடிநீர் வசதி நிறைவேற்றினோம். ரூ.543 கோடியில் சங்கரன்கோவிலுக்கு கொண்டாநகரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தொடங்கி வைத்தோம். ரூ.220 கோடியில் நெல்லை-சங்கரன்கோவில் இடையே சாலை விரிவாக்க பணிகளை நிறைவேற்றினோம். இப்பகுதியில் நாங்கள் தொடங்கிய 14 அம்மா மருந்தகங்களை மூடி விட்டனர்.

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தோம். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.9 கோடியில் 48 படுக்கை வசதி கொண்ட புதிய கட்டிடம் கட்டினோம். ஆலங்குளத்தில் ரூ.10½ கோடியில் மகளிர் கல்லூரி, கடையநல்லூரில் ரூ.7½ கோடியில் அரசு கல்லூரி தொடங்கினோம். கடையநல்லூர் தொகுதியில் ரூ.300 கோடியில் சாலை பணிகள், சுரண்டை நகராட்சியில் புதிய பாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நிறைவேற்றினோம். தென்காசியில் நீதிமன்றம், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டினோம். பாவூர்சத்திரத்தில் ரூ.6¼ கோடியில் 5 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட காய்கறி குளிர்பதன கிடங்கு அமைத்தோம். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என்று பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் சுரண்ைட அருகே வீராணத்தில் இருந்து காவலாகுறிச்சி வரையிலும் கால்வாய் அமைக்கும் திட்டத்தை தொடங்கினோம். அதனை தற்போது தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போட்டனர். இதேபோன்று ரூ.41.70 கோடியில் தொடங்கப்பட்ட ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்ட பணிகளையும் தற்போது கிடப்பில் போட்டனர். சங்கரன்கோவிலில் ரூ.1.30 கோடியில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை இன்னும் திறக்கவில்லை. திருவேங்கடத்தில் கட்டப்பட்ட புதிய தாலுகா அலுவலகத்தையும் திறக்கவில்லை.

நீட் தேர்வு

அ.தி.மு.க. ஆட்சியில் உழைக்கும் பெண்களுக்காக ஸ்கூட்டருக்கு மானியம் வழங்கும் திட்டத்தை தற்போது தி.மு.க. ஆட்சியில் நிறுத்தி விட்டனர். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தையும் கைவிட்டனர். மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியதையும் ரத்து செய்து விட்டனர். அம்மா மினி கிளினிக் தொடங்கியதையும் மூடி விட்டனர்.

நீட் தேர்வு பற்றி பேசி ஆட்சிக்கு வந்த தி.மு.க. தற்போது அந்த வாக்குறுதியை மறந்து விட்டனர். தற்போதும் அந்த மசோதாவை கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறி வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலுவதற்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் தற்போதும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை தொடங்கினோம். 7 சட்ட கல்லூரிகளையும் தொடங்கினோம். புதிதாக 40 கலை அறிவியல் கல்லூரிகளையும் உருவாக்கினோம். 32 சதவீதமாக இருந்த உயர்கல்வி பயில்வோர் விகிதத்தை 52 சதவீதமாக உயர்த்தினோம்.

ஊழல் மாடல் ஆட்சி

ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. மின்கட்டணத்தை உயர்த்தி விட்டனர். மின்சாரத்தை கேட்டால்தான் ஷாக் அடிக்கும், ஆனால் தற்போது மின்கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கின்றது. சொத்துவரியை 100 சதவீதம் உயர்த்தி விட்டனர். குப்பைக்கும் வரி போட்டு விட்டனர். சாலை வரி உயர்த்தப்பட்டு உள்ளது. பத்திரபதிவு வழிகாட்டு மதிப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பெருகி விட்டது. விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையெல்லாம் திசை திருப்ப சனாதனம் குறித்து பேசுகின்றனர். திராவிட மாடல் என்று பெயர் வைத்து கொண்டு ஊழல் மாடல் ஆட்சி நடத்தி வருகின்றனர். கமிஷன் இல்லாத துறையே இல்லை. தி.மு.க. ஆட்சியில் மக்கள் கோபத்தில் உள்ளனர். மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும் தி.மு.க. அரசு திருமண மண்டபங்களில் மது விற்க முயல்கின்றனர். மகளிர் உரிமைத்தொகையை தி.மு.க.வினருக்கும், பணக்காரர்களுக்கும்தான் கொடுக்கின்றனர். ஏழைகளை ஏமாற்றி விட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெற்றி பெறாது.

அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. யாரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் என்று கேட்கிறார்கள். இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று கூற முடியுமா?. அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். தமிழக மக்களின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்போம். ஒருபோதும் தமிழர்களின் உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம். சிறுபான்மை மக்களை பாதுகாப்போம். தமிழர்கள்தான் எங்கள் எஜமானார்கள். அவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்வோம். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். 2024 நாடாளுமன்ற தேர்தலின் வெற்றி 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, தளவாய்சுந்தரம், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், மாநில அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், ஏ.கே.சீனிவாசன்,

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், ஆர்.பி.ஆதித்தன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன் என்ற ராஜூ, முன்னாள் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், சவுந்தரராஜன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், தென்காசி மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மானூர் வடக்கு ஒன்றிய நிர்வாகி எஜமான் செந்தில்குமார், சங்கரன்கோவில் பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ், திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சிராணி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் ஆளுயர மாலை அணிவித்து, வெள்ளி செங்கோல் மற்றும் வெள்ளி வெற்றிவேல் பரிசாக வழங்கி வரவேற்றனர். மேலும் சங்கரன்கோவில் நகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் சரவணகுமார், குருப்பிரியா ஆகியோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

பொதுக்கூட்டம் நடந்த சங்கரன்கோவில்- வீரசிகாமணி சாலையின் இருபுறமும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்சிக்கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டும், அலங்கார வளைவுகள், மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டும் இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்