2024 நாடாளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இடம்பெற வாய்ப்பில்லை - எடப்பாடி பழனிசாமி

டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுவதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2022-11-16 12:02 GMT

மயிலாடுதுறை,

கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டம் வல்லம்படுகையில் ஆய்வு மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, நிவாரண உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார்.

தரங்கம்பாடி வட்டம் தலச்சங்காடு பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 1300 குடும்பங்களுக்கு அரிசி, போர்வை, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி, மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 1.15 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் கடுமையாக சேதமடைந்து உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அரசு கவனமாக கணக்கெடுப்பு நடத்தி, ஏக்கருக்கு குறைந்த பட்சம் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்காப்பீடு செய்யும் காலத்தை நீடிப்பு செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

ஆக்கிரமிப்பு பகுதிகளை சரிசெய்து, வெள்ள நீரை வெளியேற்ற அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவெண்காடு ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட அதிகாரிகள் யாரும் செல்லவில்லை.

சீர்காழி, தரங்கபாடி ஆகிய இரண்டு தாலுக்காவிற்கு மட்டும் ரூ.1000 முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதை ரூ.3000 ஆக அதிகரித்து, மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் வழங்க வேண்டும்.

அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு புறக்கணித்துள்ளது. பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அருவாமூக்கு திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். திருவாலி ஏரியை தூர்வாரும் திட்டத்தை நிறுத்தியுள்ளார்கள். அதையும் காழ்புணர்ச்சி இல்லாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

மக்கள் சந்தோஷமாக மகிழ்ச்சியாக இல்லை, முதல்-அமைச்சர் மட்டும்தான் மகிழ்ச்சியாக உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின்பு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. 2016ல் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை பட்டியலை அவர் தற்போது நிறைவேற்ற வேண்டும்.

பருவமழைக்கு முன்பாக ஏரி, குளங்களை தூர்வார திமுக அரசு தவறிவிட்டது. ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுக்கு பிறகும் அதிமுக மீது குற்றச்சாட்டுவது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வியெழுப்பினார்.

அதிமுக என்பது ஒரு பிரதான எதிர்கட்சியாக உள்ளது. பாஜக தேசிய கட்சி. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைக்கும். எந்த காலத்திலும் டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுவதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்