அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய தி.மு.க. சதி
செந்தில்பாலாஜி மீதான கைது நடவடிக்கையை மறைக்க, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது புதிய வழக்குகளை போட்டு கைது செய்ய தி.மு.க. அரசு சதி செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கோவை
செந்தில்பாலாஜி மீதான கைது நடவடிக்கையை மறைக்க, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது புதிய வழக்குகளை போட்டு கைது செய்ய தி.மு.க. அரசு சதி செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரியும், சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன்அர்ச்சுனன் எம்.எல்.ஏ., கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது கூறியதாவது:-
கைது செய்ய திட்டம்
பதவி ஏற்று 2 ஆண்டுகளாகியும் எதுவும் செய்யாத முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில்தான் செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு பழிவாங்குவதாக தி.மு.க.வினர் நடிக்கிறார்கள். செந்தில்பாலாஜியை மருத்துவமனையில் போய் பார்க்க மு.க.ஸ்டாலின் தலைமையில் அவர்களது குடும்பமே செல்கிறது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய முதல்-அமைச்சரும், போலீஸ்துறையும் நினைக்கிறார்கள். வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 5 பேரை கைது செய்வதன் மூலம், செந்தில்பாலாஜி மீதான கைது நடவடிக்கையை பொதுமக்களிடம் இருந்து மறைக்க முடியும் என்று கருதுகிறார்கள். இதற்காக முன்னாள் அமைச்சர்கள் மீது புதிய வழக்கு போட்டு கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். யாரை கைது செய்தாலும் பயப்பட மாட்டோம். அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்.
நாடாளுமன்ற தேர்தல்
கோவை மாவட்டத்திற்கு 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை தந்தோம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. நாங்கள் செயல்படுத்திய திட்டங்களை நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறோம். அவர்களால் சொல்ல முடியுமா?.
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். சட்டசபைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க. சுவரொட்டிகளை கிழிப்பது தான் போலீசின் வேலையாக உள்ளது. போலீஸ் துறை நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்து மருத்துவ மாணவர்கள் 600-க்கும் மேற்பட்டவர்களை மருத்துவராக்க வாய்ப்பு தந்த அ.தி.மு.க. அரசு மீண்டும் வரவேண்டும் என்று ஒட்டுமொத்த மக்களும் முடிவு செய்துள்ளார்கள்.
செந்தில் பாலாஜி நன்றாக இருக்க வேண்டும்
மு.க.ஸ்டாலினுக்கு முக்கியமான எதிரி நான் தான். கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் நாங்கள் வென்றோம். அதெல்லாம் பொறுக்க முடியாமல் தான் 3 முறை எனது வீட்டில் சோதனையை நடத்திய பிறகு ஒன்றும் இல்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார்கள்.
தற்போது அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. என்னை பொருத்தவரை தனிப்பட்ட முறையில் செந்தில்பாலாஜி நன்றாக இருக்க வேண்டும். ஆனால் அவர் செய்த தவறுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு உடல்நிலை நன்றாக உள்ளதா இல்லையா என்பது எனக்கு தெரியாது, அது மருத்துவர்களுக்குதான் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள். கே.ஆர்.ஜெயராம், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், சூலூர் கந்தசாமி, அமுல்கந்தசாமி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.