அ.தி.மு.க.-தி.மு.க. வினர் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் டெண்டர் எடுப்பதில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் இடையே தள்ளு, முள்ளுவால் பரபரப்பு ஏற்பட்டது.
வளர்ச்சி திட்ட பணிகள்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளக்கூடிய வளர்ச்சி திட்டத்தில் 46 பணிகளுக்கு டெண்டர் விடுவதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை 3 மணி அளவில் ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் டெண்டர் திறக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தள்ளு, முள்ளு
அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கும், தி.மு.க.வை சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே டெண்டர் எடுப்பதில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்களுக்குள் தள்ளு, முள்ளு ஏற்பட்டதால், பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து ஒன்றிய அலுவலக பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
டெண்டரை கைப்பற்ற முடியாததால் கட்சியினர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால், அவர்களை போலீசார் அலுவலகத்தை விட்டு வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அந்த பணிகளுக்கு டெண்டர் விடவில்லை.