அ.தி.மு.க., தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 55 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

பொள்ளாச்சியில் நடந்த பிரமாண்ட விழாவில் அ.தி.மு.க., தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 55 ஆயிரம் பேர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

Update: 2022-08-24 17:17 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் நடந்த பிரமாண்ட விழாவில் அ.தி.மு.க., தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 55 ஆயிரம் பேர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

கட்சியில் இணையும் விழா

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி அண்ணா திடலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் மாற்று கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது. இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், பொங்கலூர் நா.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் வரவேற்று பேசினார்.

விழாவில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி, அவருடைய மகளும், மாவட்ட கவுன்சிலருமான அபிநயா ஆறுக்குட்டி, தே.மு.தி.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பனப்பட்டி தினகரன், பா.ஜனதா மகளிர் அணி மாநில செயலாளர் மைதிலி உள்பட 55 ஆயிரம் பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

மகிழ்ச்சியாக இருக்கிறது

மாற்று கட்சியில் இருந்து விலகி தாய் கழகமான தி.மு.க.வில் இணைந்த உங்களை வருக, வருக என வரவேற்கிறேன். மாற்று கட்சியில் இருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றோ, மாற்றான் தாய் மக்கள் என்றோ நான் நினைக்கவில்லை. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வோடு நான் உங்களை நினைக்கிறேன். நீங்கள் வருகின்ற இடத்திற்கு தான் வந்து இருக்கிறீர்கள். நான் உங்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சி, எனது மகிழ்ச்சியை பன்மடங்கு உயர்த்தி இருக்கிறது. உங்களை எல்லாம் அழைத்து வந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை மனமார வாழ்த்துகிறேன். அவர் ஒரு செயலில் இறங்குகிறார் என்றால் அது பாராட்டுக்குரியதாக தான் அமையும். எண்ணிக்கையை விட எண்ணம் முக்கியம் என்று நினைப்பவர் அவர். அந்த வகையில் இந்த பொள்ளாச்சியில் இருக்கிற இந்த ஆச்சிப்பட்டி ஆச்சரியப்பட்டியாக எனக்கு காட்சி அளிக்கிறது.

தி.மு.க.வின் கொள்கைகள்

அண்ணா மறைவிற்கு பிறகு 1971-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி திருச்சியில் தி.மு.க. மாநாட்டை கூட்டினார். அதில் அவர் ஐம்பெரும் முழக்கங்களை வடித்து கொடுத்தார். அதேபோன்று மார்ச் 24-ந் தேதி 2018-ம் ஆண்டு ஈரோட்டில் நடந்த ஒரு மாநாட்டில் நான் ஒரு 5 முழக்கங்களை அறிவித்தேன். இந்த 10 முழக்கங்களில் தி.மு.க.வின் கொள்கைகள் அடங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் நமது நாட்டின் ஒருமைபாட்டிற்கும் இந்த கொள்கைகள் உள்ளன. 1949-ம் ஆண்டு தி.மு.க. தொடங்கப்பட்டது. 18 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தோம். ஆனால் இப்போது கட்சி தொடங்கியதும் நாங்கள் தான் அடுத்த ஆட்சி என்று சொல்கிறார்கள். கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே நாங்கள் தான் முதல்-அமைச்சர் என்று கூறி வருகின்றனர்.

ஆனால் நமது கட்சி 1949-ல் தொடங்கி, 1952-ம் ஆண்டு தேர்தலை சந்தித்தது. அதில் படிப்படியாக வளர்ந்து 1967-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தோம். இப்போது நாம் 6-வது முறையாக ஆட்சிக்கு வந்து உள்ளோம். இந்த நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கலாம். அவை எத்தனையோ தேர்தல்களை சந்தித்து இருக்கலாம். நம்மை போல வெற்றி பெற்ற கட்சி நாட்டில் எதுவும் இல்லை. நம்மை போல தோற்ற கட்சியும் எதுவும் இருக்க முடியாது. இரண்டிலும் நமக்கு தான் பெருமை.

நாம் அடையாத புகழும் இல்லை. நாம் படாத அவமானமும் கிடையாது. நாம் செய்யாத சாதனைகளும் இல்லை. அடையாத வேதனைகளும் கிடையாது. இவ்வளவுக்கு பிறகும் இந்த இயக்கம் 70 ஆண்டுகளை கடந்து நிலைத்து நீடித்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் நாம் கொள்கைகாரர்கள் என்பதால் தான். அந்த கொள்கைகளை காப்பாற்ற உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்.

சமூக நீதி, சமதர்மம், மனிதநேயம், மொழிபற்று, இனஉரிமை, மாநில சுயாட்சி, கூட்டாச்சி தத்துவம் என்பது தான் திராவிடம். ஒட்டுமொத்தத்தில் திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்று சொல்ல கூடியது. அந்த திராவிட மாடல் ஆட்சி தான் இப்போது தமிழகத்தில் நடந்து வருகிறது.

செய்யாத சாதனைகள்

இதுவரையும் எந்த ஆட்சியிலும் செய்யாத சாதனைகளை நாம் செய்து உள்ளோம். இப்போது இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத சாதனைகளாக, பெண்களுக்கு கட்டணம் இல்லாத பஸ் வசதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, ஆவின் பால் விலை ரூ.3 குறைப்பு, நகைக்கடன் தள்ளுபடி, கூட்டுறவு கடன் தள்ளுபடி, வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன், இன்னுயிரை காப்போம், நம்மை காக்கும் 48, சமத்துவபுரம், அரசு முன்மாதிரி பள்ளிகள், அன்னை தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சாதனை பட்டியல் நீட்டு கொண்டு செல்கிறது. தினந்தோறும் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி கொண்டு வருகிறோம்.

பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை விரைவில் தொடங்க இருக்கிறோம். ஒரே நேரத்தில் கல்வியிலும், நல்வாழ்விலும், தொழில்துறையிலும், சமூக நலத்துறையிலும் செய்து வரக்கூடிய சாதனைகளை பார்த்து பலருக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் சிலருக்கு அதிர்ச்சியாக உள்ளது. என்னிடம் நெருங்கி இருக்கும் சிலர் நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்று சொல்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்வேன். நான் சொல்லி செய்கிறவன் அல்ல. சொல்லாமல் செய்பவன்.

சொல்லாமலேயே செய்வோம்

கலைஞரின் முழக்கம் சொன்னதை செய்வோம். செய்வதை சொல்வோம். ஆனால் எனது பாணி என்பது சொல்லாததையும் செய்வோம். சொல்லாமலேயே செய்வோம். சட்டமன்ற தேர்தலுக்கு முன் தி.மு.க. சார்பில் மாநில முழுவதற்கும் ஒரு தேர்தல் அறிக்கை, மாவட்டங்களுக்கு என்று தனி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த தேர்தல் அறிக்கையில் 60 முதல் 70 சதவீதம் வரை வாக்குறுதிகளை செய்து முடித்து உள்ளோம். மற்றவையும் படிப்படியாக உறுதியாக அண்ணா மீது ஆணையாக சொல்கிறேன். அவை கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இது தான் சொல்லாமல் செய்கிற பாணி. எனவே தான் எதிர்க்கட்சிகளின் அவதூறுகள், பழிச்சொற்களுக்கு எனக்கு பதில் சொல்ல நேரமில்லை. ஆட்சியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்காக 20 மணி நேரம் உழைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், பையா கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாநில விவசாய அணி துணைத்தலைவர் தமிழ்மணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன், முன்னாள் எம்.பி. ஏ.பி.நாகராஜன், மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மற்றும் மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பி.மாரிச்செல்வன், தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தொ.அ.ரவி, கவுண்டம்பாளையம் பகுதி செயலாளர் ஜெ.எஸ்.சரத், வடவள்ளி பகுதி எஸ்.எம்.முருகன், ஆர்.எஸ்.புரம் பகுதி செயலாளர் கார்த்திக் கே.செல்வராஜ், வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், வர்த்தக அணி மாநகர் மேற்கு மாவட்ட துணை அமைப்பாளர் விவேகானந்தன், இந்தியன் யூனிபார்ம் சர்வீஸ் அறக்கட்டளை தலைவர், புதிய விடியல் பிக்சர்ஸ் படத்தயாரிப்பாளர் கோவை ப.தங்கவேல், கோவை மாநகர் மற்றும் புறநகர் ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் கோபால், பொருளாளர் எஸ்.ஏ.கணேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்