அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் தேர்தலை இந்த மாதத்துக்குள் நடத்த திட்டம்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பொதுச்செயலாளர் தேர்தலை இந்த மாதத்துக்குள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சென்னை,
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கட்சி நிர்வாக ரீதியாக 75 மாவட்டங்கள் உள்ள நிலையில், இதில் 6 மாவட்ட செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் வசம் இருக்கின்றனர். மீதமுள்ள 69 மாவட்ட செயலாளர்களில், 68 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், வருகிற 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி சிவகங்கையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதால், சிவகங்கை மாவட்ட செயலாளர் மட்டும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி வளர்ச்சி பணிகள்
கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
காலை 11.10 மணிக்கு தொடங்கிய கூட்டம், பிற்பகல் 12.30 மணிக்கு நிறைவு பெற்றது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மாவட்ட செயலாளர்களுடன், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை, அடுத்ததாக பொதுச்செயலாளராக ஆக்குவதற்கு தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், வர இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆயத்தப் பணிகள் தொடர்பாகவும், கட்சி வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
பொதுச்செயலாளர் தேர்தல்
அதிலும் குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி ஏற்படுத்தவும், அதில் இப்போதே சரியான நபரை நியமிக்கவும் எடப்பாடி பழனிசாமி கூறியதோடு, பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை இந்த மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்றும், அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏற்பாடுகளை இப்போது இருந்தே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதவிர, தற்போது அ.தி.மு.க. - பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே வார்த்தை போர் முற்றி வரும் நிலையில், அதுகுறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதுபற்றி எதுவும் பேசவில்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூட்டம் முடிந்து வெளியே வந்ததும் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஆலோசனை
இதற்கிடையில் கூட்டம் நடந்து முடிந்ததும், அ.தி.மு.க. தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 'கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தி.மு.க. அரசின் பல்வேறு மக்கள் விரோத செயல்களை பட்டித்தொட்டியெங்கும் வாழும் மக்களிடம் எடுத்துரைப்பது குறித்தும், மாவட்ட செயலாளர்களுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கினார்' என்று தெரிவிக்கப்பட்டது.